இலங்கை அரசியலில் மொசாட் தலையீடு..! தமிழ் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
வைத்தியர் கு.சுகுணன், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புடன் இணைந்து செயற்படுகிறாரா என்றும், நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் அமைப்பின் தாக்கம் இருகின்றது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அம்பாறை - கல்முனையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் - இஸ்லாமியர்களின் பிரிவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையேயிருந்த பரஸ்பர நட்பையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்க “மொசாட் அமைப்பு” செய்த வேலையே காரைதீவு சந்தியில் இரு சமூகங்களையும் பிரித்தமையாகும்.
அப்போது, ஆயுதமேந்திய சிலர் எடுத்த முடிவுகள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கே பாரிய சவாலாக அமைந்தது.

தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தமது மத மற்றும் கலாசார ஆடையுடன் கடமையைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்படாத விவகாரத்தில், வைத்தியர் சுகுணன் அவ்வாறான ஒரு பின்னணியில் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கல்முனைப் பிராந்தியத்தில் உருவெடுத்துள்ள இந்தச் சர்ச்சை தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை விரும்பும் அனைவருக்கும் பெரும் கவலையளித்துள்ளது.
உடனடி நடவடிக்கை தேவை
தமிழ் அரசியல் தலைமைகள் உடனடியாக இதில் தலையிட்டுச் சுமுகத் தீர்வைக் காண வேண்டும். இது குறித்துத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்பிக்களான மனோ கணேசன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடி, சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

கல்முனை மண்ணில் கடற்கரைப் பள்ளிவாசல் விழாக்கள் மற்றும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய உற்சவங்களில் இரு சமூகத்தினரும் பரஸ்பரம் பங்கேற்கும் நீண்டகால நல்லிணக்க வரலாறு உள்ளது. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறி எந்தவொரு அரச நிறுவனமும் முடிவெடுக்க முடியாது.
எனவே, சட்டநடவடிக்கைகளுக்குச் செல்ல முன்பாக அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.
YOU MAY LIKE THIS VIDEO