அநுர அரசாங்கத்தின் மறைக்கப்பட்ட கறுப்பு பக்கங்கள்! பெயரை சுட்டிக்காட்டி வெளிவந்த எச்சரிக்கை
பட்டலந்த அறிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் எதிர்கட்சி எம்.பி முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman) வெளிப்படுத்திய விடயங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் விதமாக அமைந்திருந்தது.
வதைமுகாம்கள், தாஜூடீன் விவகாரம், விஜயவீரவின் கொலை, பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் பிரச்சினை, மோடியின் இலங்கை வருகை போன்றவற்றை வெளிப்பத்தி அவர் நாடாளுமன்றில் பேசிய விடயங்கள் இன்றைய விவாதத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
மேலும் சில விடயங்களை ஜேவிபி தரப்பு ஆட்சிக்கு வந்தவுடன் மறந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் முஜிபுர் ரஹ்மானின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.
“சபை முதல்வரே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கரை ஒட்டிய இளைஞனை பொலிஸார் கைது செய்திருந்தார்கள்.
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கரை காட்சிப்படுத்தியதற்காக 90 நாட்கள் அவரை தடுத்து வைக்க உத்தரவிட்டீர்கள்.
நாங்கள் இதனை எதிர்த்து போராடினோம். இஸ்ரேலை எதற்காக இவ்வளவு தூரம் ஆதரிக்கிறீர்கள்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி பாலஸ்தீன தூதரகத்திற்கு சென்று தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஆனால் இப்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடுகிறீர்கள்
அப்படியென்றால் இதற்குள் மொசாட் அமைப்பு உள்ளதா என்பது குறித்து எமக்கு சந்தேகம் எழுகிறது.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் அவர் பயங்கரவாத பிரிவுக்கு வருகைதந்து கையொப்பமிடவேண்டும் என கூறியுள்ளீர்கள்.
குற்றமில்லாது விடுவிக்கப்பட்ட ஒருவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
பிள்ளையான்
இரு தினங்களுக்கு முன்னர் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதான பிள்ளையானுக்கு கூட 72 மணி நேர தடுப்பு கட்டளையே பிறப்பிக்கப்படுள்ளது.
ஆனால் இந்த இளைஞன் 90 நாட்கள் ஏன் தடுத்துவைக்கப்பட வேண்டும்? இது தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அந்த இளைஞனின் பெற்றோரை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரித்துள்ளீர்கள். மனித உரிமை ஆணையத்துக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளீர்கள்.
இது உங்களுக்கு தெரியவில்லை என்றால் அந்த பெற்றோரை அழைத்து வந்து இந்த விடயங்களை என்னால் பகிரங்கப்படுத்தமுடியும்.
இங்கு மற்றுமொரு பேச வேண்டிய விடயம்தான் பட்டலந்த அறிக்கை சமர்ப்பிப்பு.
பட்டலந்த சர்ச்சை
பட்டலந்த எனும் குப்பையை 21 ஆண்டுகளின் பின்னர் கிளறியுள்ளீர்கள்.
2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த அறிக்கை இந்த உயரிய சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜே.வி.பியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கு இருந்தார்கள்.ஆனால் அப்போது ஒருவரும் வாய் திறக்கவில்லை. அந்த குப்பையை தற்போது கிளறியுள்ளீர்கள் .
அன்று 10 பேரும் மௌனித்திருந்தீர்கள். அல்ஜெஸீரா கூறியதும் இதனை வெளிப்படுத்துகிறீர்கள். தற்போது தேர்தலுக்கு ஒரு தலைப்பு உங்களுக்கு தேவைப்பட்டுள்ளது. அதனாலேயே பட்டலந்த மீண்டும் கிளறப்பட்டுள்ளது.
முன்னதாக உங்கள் அரசாங்கம் இந்து - இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக புரட்சியை ஆரம்பித்தவர்கள்.
ரணிலுக்கு ஆதரவு
தமிழர்களுக்கு எதிராக இவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். மாகாணசபை வேண்டாம் என்று நீங்களே எதிர்த்தீர்கள்.
அன்று இந்து - இலங்கை ஒப்பந்தத்தில் மாகாணசபை கொண்டு வந்தமை இங்குள்ள இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு.
ஆனால் 1994ஆம் ஆண்டு மாகாணசபைக்கு வந்து ஆசனத்தை பெற்றுக்கொண்டீர்கள்.
மேலும், சந்திரிகா அரசாங்கத்திலும் அங்கம் வகித்தீர்கள். ஆனால் அப்போது பட்டலந்த பற்றி பேசவில்லை.அதன் பின்னர் மகிந்தவை ஜனாதிபதியாக்க பணியாற்றினீர்கள். அப்போதும் பட்டலந்தவை கொண்டுவரவில்லை.
தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றுக்குழுவில் தற்போதைய ஜனாதிபதி பிரதான பதவியில் இருந்தார். நானும் ஹந்துன்நெத்தியும் ஒரே மேடையில் இருந்தோம்.
ரணிலுக்கு ஆதரவாக அப்போது நீங்களே ஒன்றாக இருந்துவிட்டு, இன்று எதிராக கூச்சலிடுகிறீர்கள். நாங்கள் இன்னும் பல விடயங்களை அம்பலப்படுத்தினால் இந்த அரசாங்கம் அநாதரவாக மாறிவிடும்.
தற்போது தேர்தலை மையப்படுத்தி பட்டலந்தவை இங்கு கொண்டுவந்துள்ளீர்கள்.
மாத்தளை மனித புதைகுழி
அரகலயவில் கோட்டாபய மீதான மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் அறிக்கைகளை வெளிப்படுத்தி இருந்தீர்கள். அரசாங்கம் அமைத்து இவ்வளவு காலம் ஆகியும் இதனை ஒருமுறையாவது நீங்கள் கதைத்துள்ளீர்களா?
வரலாற்றை திரும்பி பார்த்தால் உங்கள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜே.வி.பியின் அடக்குமுறை முகாமுக்கு தலைமை தாங்கியுள்ளார். அதை பற்றி என்ன கூறுகின்றீர்கள். அப்படியானால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா?
இவ்வாறான குற்றச்செயல்களுக்கு முக்கியமாக பொறுப்பு கூற வேண்டியவர்கள் உங்கள் அரசாங்கத்திலேயே இருக்கிறார்கள்.
அடுத்ததாக உங்களது அமைச்சின் முக்கிய ஆலோசகராக ரனவீர என்ற ஒருவர் இருக்கிறார். அவர் வெளிப்பண்ணையில் இருந்த ஒரு முகாமுக்கு தலைமை தாங்கியவர்.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தாஜூடீன் கொலையில் அவர் தேவையான தகவல்களை மறைத்ததாக கூறப்படுகிறது. அவரை வைத்தே இப்போது தாஜூடீன் தொடர்பில் விசாரிக்கின்றனர்.
மற்றுமொரு விடயம்தான் ஜே.வி.பியின் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்.
இதுவரை காலமும் அவரைப்பற்றி தேடுவதற்கு நீங்கள் கொண்டுவந்த முன்மொழிவுகள் என்ன?
200 முகாம்கள்
உங்களது தலைவர் விஜயவீரவின் வீட்டில் பணியாற்றிய ஒரு ஊழியரின் சகோதரரை இந்த ரனவீர என்பவரே கொலை செய்தார் என குற்றச்சாட்டும் உள்ளது. அவ்வாறென்றால் அவரை கைது செய்தீர்களா?
பட்டலந்த மாத்திரம் அல்ல இங்கு உள்ள சித்திரவதை முகாம். 200 முகாம்கள் மொத்தம் இருந்தன.
மேலும் இவர்களே இந்திய எதிர்ப்பை அன்று உருவாக்கினார்கள். இலங்கையை இந்தியாவின் பிராந்தியமாக்கவேண்டாம் என போராட்டத்தை நடத்தியவர்கள் நீங்கள்.
ஆனால் அண்மையில் இந்திய பிரதமர் நாட்டுக்கு வந்தபோது கூட அவரை வரவேற்று ஒப்பந்தமிடுகின்றீர்கள்
இது ஒருபுறம் இருக்க உங்கள் செயலாளர் கூறுகின்றார் இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தங்கள் எதுவும் செய்யவில்லை என்று.
அவ்வாறென்றால் என் இந்திய ஒப்பந்த அறிக்கையை வெளியிட தாமதிக்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார் முஜிபுர் ரஹ்மான் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |