ரஷ்யாவிற்கு தொடரும் நெருக்கடி! - மேலும் பல தடைகளை விதித்தது பிரித்தானியா
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானிய மேலும் பல தடைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இன்னும் அதிகமான தடைகளை விதிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.
இதன்படி, ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் உள்ளிட்ட மேலும் மூன்று ரஷ்ய வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "முக்கியமான துறைகளில்" பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவிற்கான ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யுத்தம் மாதங்கள், வருடங்கள் என நீடித்தாலும் உக்ரைன் மக்களுக்காக பொருளாதார தியாகங்களைச் செய்ய பிரித்தானியா தயாராக இருப்பதாகவும், எவ்வளவு காலம் எடுத்தாலும் பொருளாதாரத் தடைகள் தொடரும் என்றும் கூறினார்.
இதேவேளை, ரஷ்யாவிற்கான அனைத்து பயணங்களுக்கும் எதிராகவும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவின் பொருளாதார தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த வாரம் இங்கிலாந்துக்கான அனைத்து விமானங்களையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடை செய்தார். இந்நிலையில், பிரித்தானியர்கள் ரஷ்யாவிற்கு அத்தியாவசியமான பயணத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ரஷ்ய கொடியிடப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட, சொந்தமான, அல்லது இயக்கப்படும் கப்பல்களுக்கு அணுகலை வழங்க வேண்டாம் என்று அனைத்து இங்கிலாந்து துறைமுகங்களுக்கும் போக்குவரத்துச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.