சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
சமூக சேவைகள் திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ள சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (09) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
விவாதிக்கப்பட்ட விடயம்
குறித்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சமூக சேவைகள் திணைக்களத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் விவாதிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அவர்களை தொழில் வாய்ப்புக்குள் உட்புகுத்தல் தொடர்பிலான முன்னேற்றங்கள் மிகவும் திருப்திகரமாக இருக்க வேண்டும் என்று இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூறினார்.
சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
மேலும் 2024 ஆம் ஆண்டு சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட உத்தியோகத்தர்களுக்கான சுப அபிமானி போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற கிண்ணியா பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எப்.எம்.பௌமிக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சமூக சேவைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.பிரணவன் மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



