சமூகத்தை விழுங்கி வேட்டையாட முயற்சிக்கும் பயங்கரமான அரக்கன்
சில காலத்திற்கு முன்னர் 'ஐஸ்' என்ற வார்த்தையைக் கேட்கும் போது ஒரு இனிமையான குளிரான உணர்வைத் தூண்டியது. எனினும் தற்போது ஐஸ் என்ற சொல்லை கேட்கும் போது சமூகத்தை விழுங்கி வேட்டையாட முயற்சிக்கும் பயங்கரமான அரக்கனே நினைவுக்கு வருகிறான்.
அண்மைய காலமாக கஞ்சா, ஹெரோயின், ஹாஷீஷ், மரிஜுவானா, கொக்கேய்ன், கேரளா கஞ்சா போன்ற பிரபலமான போதைப் பொருட்களின் வரிசையில் 'ஐஸ்' முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையில் தீவிரமாக பரவியுள்ள போதைப் பொருட்கள்
இந்த அபாயகரமான போதைப் பொருட்கள் இலங்கையில் எந்த அளவுக்கு தீவிர பரவி உள்ளன என்பதற்கு சிறந்த உதாரணம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் கிடைத்தது.
பாடசாலையின் சிற்றுண்டி சாலையில் இருந்து 'ஐஸ்' போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றினர். ஏழு 'ஐஸ்' பெக்கட்டுகள் மற்றும் மேலும் 37 போதை மாத்திரைகள் அவற்றில் அடங்கும்.
இது ஒரு கடுமையான சமூகப் பேரழிவு மட்டுமல்ல, மிகவும் கவலை தரும் விடயமுமாகும். குழந்தைகளை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் பாடசாலைகளில் போதைப்பொருள்கள் விற்கப்படுகின்றன என்றால், அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாவதால் முழு தேசத்தின் எதிர்காலமும் ஆபத்தில் சிக்கியுள்ளது, குறிப்பாக பாடசாலைக்கு செல்லும் தலைமுறையினர் மற்றும் இளைஞர்கள் அறிவாற்றலில் முதிர்ச்சியடையாதவர்கள்.
எனவே, இந்தப் பேரழிவிலிருந்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற அவசரமான தேசிய அளவிலான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் தகவல்களுக்கு அமைய, சுமார் 370 வகையான ஐஸ் போதைப்பொருள் வகைகள் உள்ளன.
ஏனைய போதைப் பொருட்களுடன் ஒப்பிடும் போது விலை குறைவும் வீரியம் அதிகமாக இருப்பதே ஐஸ் பயன்படுத்துவோர் மத்தியில் அது வரவேற்பை பெற காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, சில காலங்களுக்கு முன்னர் ஹெரோயின் பயன்படுத்தியவர்களில் சுமார் 80 வீதமானவர்கள் தற்போது ஐஸ் போதைப் பொருள் பழக்கத்திற்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டு தொடர்ந்தும் ஐஸ் பயன்படுத்தினால் மரணம்
ஐஸ் போதைப் பொருளின் மிகவும் ஆபத்தான நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரபல மருத்துவ நிபுணர் ரூமி ரூபன், இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஐஸ் உபயோகிப்பவர் உடனடியாக மரணமடைவார் என தெரிவித்துள்ளார். தற்போது கூட இந்த அனர்த்தத்தை சில இளைஞர் சமூகம் தழுவியிருப்பது ஆச்சரியமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ் என்ற போதைப்பொருள் பற்றி அதிகளவான விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதற்கு அடிமையானவர்களை அப்புறப்படுத்துவது எளிதல்ல. ஐஸ் போதைப் பொருளுக்கான கேள்வி மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தினால் மாத்திரமே இந்த அழிவை குறைக்க முடியும் என பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கைக்கு முக்கியமாக கடல் வழியாகவே ஐஸ் போதைப் பொருள் கடத்தி வரப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர், தற்போது வரை, கடல் வழியாக அதிக அளவில் வரும் கப்பல்கள் மூலம் ஐஸ் போதைப் பொருள் கடத்திச் செல்லப்பட்டாலும் பாதுகாப்புப் படையினரிடம் அவை பிடிப்படவில்லை.
ஆனால் சிறிய மீன்பிடி படகுகளில் ஐஸ் போதைப் பொருளை கடத்திச் செல்லும்போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையை சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது.
சமூக விழிப்புணர்வை விரிவுப்படுத்த வேண்டும்
சமூக விழிப்புணர்வுவை விரிவுப்படுத்த வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தி போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். சட்ட விதிகளை கடுமையாக்குவதும் முக்கியம். இவை அனைத்திற்கும் மேலாக போதைப் பொருள் பாவனையாளர்களின் குறிப்பாக சிறார்களின் புனர்வாழ்வுக்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.
தற்போது, இந்த நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து 16 நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. எனினும் 4 அரச புனர்வாழ்வு நிலையங்களே இருக்கின்றன.
இந்த 16 புனர்வாழ்வு நிலையங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு வழங்க முடியும் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ் பேதைப் பொருள் பரவலின் வேகத்திற்கு அமைய புனர்வாழ்வுத் துறை மிகவும் விரிவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாக செயற்பட வேண்டும். போதைப்பொருள் தடுப்பில் ஊடகங்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.
முக்கிய பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம். அதற்கான முயற்சிகளும் இன்னும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், ஐஸ் அல்லது வேறு எந்த போதைப்பொருளாக இருந்தாலும், அதனை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க முடியாது.
ஆனால் அதை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் அதற்கான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் புதுப்பிக்கப்பட்டு காலத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
சட்ட விதிகளை கடுமையாக்குவதும், விழிப்புணர்வை பரப்புவதும் போதைப்பொருள் தடுப்புக்கு சிறந்த கருவியாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடத்தை குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருப்பதும், அவர்களுடன் அன்பையும் அரவணைப்பையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிள்ளைகள் வழிதவறிச் செல்வதைத் தடுக்க முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.