ஒற்றையாட்சி முறை பெரும் தோல்வியில்! - விக்கி அணி
நாட்டின் இன்றைய பேரழிவுச் சூழலுக்கும் பின்னடைவு நிலைக்கும் ஒற்றையாட்சி அரசமைப்பு முறையே காரணம். பொருளாதார ரீதியிலும், பிற விடயங்களிலும் இலங்கை தோற்றுப் போன நாடாகத் துவண்டு கிடப்பதற்கு ஒற்றையாட்சி முறையே முழுக்காரணமாகும்.
சமஷ்டி (Federal) அல்லது கூட்டாட்சி (Confederal) முறைமையிலான அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதால்தான் இந்த நாடு மீண்டெழுந்து அமைதி, சமாதானம், அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகிய உயர் வழிகளில் மேலுயர முடியும்.
இப்படி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழு முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இன்று காலை எடுத்துரைத்திருக்கின்றது.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள நிபுணர் குழுவின் கலந்துரையாடல் மண்டபத்தில் இன்று காலை 9 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகத் தனது கருத்துக்களை முன்வைத்தது.
அந்தக் கூட்டணி சார்பில் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் தலைமையில் க.சுரேஷ் பிறேமச்சந்திரன், கலாநிதி க.சர்வேஸ்வரன், எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், செல்வேந்திரா ஆகியோர் பங்கு பற்றினர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அங்கு தெரிவித்த முக்கிய கருத்துக்களின் சாரம் வருமாறு : இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடு என்பதை இலங்கை அரசு ஏற்று, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
அந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிக்கும் ஓர் அரசமைப்பு மூலமே நாட்டை மேம்படுத்த முடியும். தமிழ் மக்கள் மீது சிங்களவரின் பெரும் பான்மையின் மூலம் பல்வந்தமாகத் திணிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பு முறைமை பெரும் தோல்விகண்டு விட்டது.
இன்று நாடு எதிர்கொண்டுள்ள பேரிழப்புக்களுக்கும், பின்னடைவுகளுக்கும் அவலங்களுக்கும் அதுவே - அது மட்டுமே - காரணம். அதனால்தான் அதிலிருந்து வெளியே வருமாறு நாம் கோருகின்றோம்.
சமஷ்டியும் கூட்டாட்சியும் பிரிவினை அல்ல. ஒன்றுபட்டு, ஐக்கியமாக வாழ் வதற்குரிய உயரிய முறைமைகளே அவை. நாடாளுமன்றுக்குப் பதில் கூறக்கூடிய பிரதமரின் கீழ் நிறைவேற்றதிகாரம் பிரயோகிக்கப்படும் ஒரு முறைமைஎன்றால் அதன் கீழ் சமஷ்டி முறை அரசமைப்பையும் - அப்படியில்லாமல் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையைத் தொடர்வதாக இருந்தால் கூட்டாட்சி முறை அரசமைப்பையும் - ஏற்படுத்துவதே நாட்டின் மேன்மைக்கு ஒரே வழியாகும்.
உலக நாடுகள் பலவற்றிலும் பல்லின, பல்மொழி, பல் சமூக தேசங்களை ஒன்றிணைக்கும் உயரிய ஆட்சி முறையாக இந்த இரண்டுமே உள்ளன.
சிறுபான்மை இனங்களையும் உள்வாங்கும் ஓர் அரசமைப்பை இலங்கைஏற்படுத்த வேண்டும் என்றால் இந்த இரண்டில் ஒன்றுக்கு இணங்குவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும். என்று தெரிவிக்கப்பட்டது.
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri