ஞானசார தேரருக்கு ஆதரவான நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மற்றொரு பிக்குகள் குழு
வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாக அண்மைக்காலமாக சில பிக்குகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மற்றொரு பிக்குகள் குழு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிட்ட அவர்கள், இந்த நடவடிக்கையானது தோல்வியடைந்த அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சி எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சட்டரீதியான தண்டனைக் காலம்
மெதிரிகிரிய அசோகாராம பிரிவெனாவின் ஆசிரியரான வணக்கத்திற்குரிய கல்கமுவே நந்தாலோக தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஞானசார தேரரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, தோல்வியடைந்த அரசியல் தரப்பினர் தங்களது அரசியல் நோக்கங்களை மறைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதுடன், பௌத்த சாசனத்தின் கௌரவத்தையும் மேலும் குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது வருமான வாய்ப்புகளை இழந்த சிலர் பணத்தைச் செலவிட்டு காவி உடையை இவ்வாறு பயன்படுத்துவது, எதிர்காலத்தில் பிக்குகள் தங்களது கருத்துக்களை வெளியிட முடியாத நிலையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சட்டரீதியான தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் ஞானசார தேரர் விடுதலையாகி வருவார் எனக் குறிப்பிட்ட அவர், தோல்வியடைந்த அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படும் இந்தத் திட்டத்தை உடனடியாகத் தோற்கடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இந்த நடவடிக்கை தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என பொலன்னறுவை மாவட்ட தேசிய பிக்கு முன்னணியைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய உல்பத்தேலகம சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற தீர்வு
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தங்களுக்கு இழந்த அரசியல் வாய்ப்புகளை மீண்டும் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தப் புதிய நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பௌத்த கொடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த இனவாத வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மகா சங்கத்தினரிடமும் பொதுமக்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய சட்டக் கட்டமைப்பு மற்றும் ஜனாதிபதியின் தலையீடு தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலன்னறுவை மாவட்ட தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் வணக்கத்திற்குரிய பேருபல்லே சுகதசோம தேரர், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஜனாதிபதி சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற தீர்வுகளைத் தேடாமல் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மகா சங்கத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த பதிவாளர் தேரர்களை அழைத்து, இந்தப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே பொருத்தமான முறையில் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.