பிரித்தானியாவைத் தாக்கும் குரங்கு அம்மை
பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிட் தனிமைப்படுத்தல் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது.
இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள இருவரும் வெளிநாடொன்றில் இருந்தே இந்தக் கிருமியைக் காவிக் கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
நோய்த் தாக்கத்துக்குள்ளான இவர்கள் இருவரில் ஒருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குரங்கு அம்மை என்பது அரிய நோய். இது தோல் வெடிப்பைக் கடுமையாக்கி , தலைவலி, முதுகு வலி, புளு காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டும்.
குரங்குகள், எலிகள், அணில்கள், சிறிய விலங்கினங்கள் மூலமாக இந்தக் கிருமித் தொற்று பரவுகின்றது. இந்த நோயானது சாதாரணமாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிலேயே காணப்பட்டது.
இந்தக் கிருமியானது கண்கள், வாய், மூக்கு, வெடித்த தோல் பகுதி என்பவற்றின் ஊடாக உடலுக்குள் செல்கின்றது.
அதற் பிறகு ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குத் தோலுக்குத் தோல் இருமல், தும்மல், தொடுதல் மூலமாக பரவுகின்றது.