மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு இடம்பெறும் முக்கிய நிகழ்வு
அடுத்த மாத முதல் வாரப்பகுதியில், இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு மாகாணத்தின் சம்பூரில் நடைபெறும், சூரிய மின்சக்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் ஏப்ரல் 4 ஆம் திகதி, இரண்டு நாள் பயணமாக இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் புதுடில்லிக்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டிருந்த போது, ஜனாதிபதி அநுரகுமார விடுத்த அழைப்புக்கு இணங்கவே, மோடியின் இலங்கை பயணம் நிகழ்கிறது.
அமைச்சரவை அனுமதி
சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம், இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய வெப்ப மின் கழகம் (NTPC) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாக செயற்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் ஊடாக, மின்சார கொள்முதல் ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஒரு அலகுக்கு ஐந்து அமெரிக்க சதங்களுக்கு சற்று அதிகமாக, இலங்கையால் கொள்முதல் செய்யப்படும். இது 120 மெகாவோட் மின் உற்பத்தி நிலையமாக செயற்படும்.
இலங்கை வருகை
முன்னதாக, இந்தியப் பிரதமர் 2015 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் முதன்முறையாக இலங்கை வந்தார்.
அந்த விஜயத்தின் போது, திருகோணமலையை பெட்ரோலிய மையமாக மேம்படுத்துவதன் அவசியத்தைப் பற்றி விவாதித்தார்.
பின்னர், 2017, மே மாதத்தில், சர்வதேச விசாகத் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர் இலங்கை வந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
