அரச ஊடகங்களில் நவீன மாற்றங்கள்! அமைச்சர் பந்துல குணவர்த்தன
அரச ஊடகங்களில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இயங்கி வரும் அரச ஊடகங்கள்
அரச ஊடகங்கள் அனைத்தும் தற்போதைக்கு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவற்றை வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பொருத்தமான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். அதற்காகவே தற்போதைய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவி விலகச் சொல்லியுள்ளேன்.
ஊடக நிறுவனங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படும் போது முன்னர் இருந்த சிலருக்கும் மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பம் உள்ளது என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.



