புதிய ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகம் செய்யும் சமூகப் பாதுகாப்புச் சபை
புதிதாக விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் சேவைத் தளத்தின் கீழ், பொதுமக்கள் இப்போது வீட்டிலிருந்தபடியே கைபேசிகள் மூலம் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்குப் பதிவு செய்துகொள்ளலாம் என இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
www.socialsecurity.lk என்ற இணையதளம் வழியாக சமூகப் பாதுகாப்புச் சேவைகளை மிகவும் திறமையாகவும் வசதியாகவும் அணுகுவதை வழங்குவதே இந்த டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியின் நோக்கம் என்று குறித்த சபை கூறியுள்ளது.
ஓய்வூதியச் சேவை
மேலும், பரந்த பொதுப் பலன்களைக் கொண்ட பல்வேறு ஓய்வூதிய மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் எளிதாக அணுகுவதற்கு வழிவகுக்கும் என்றும் அச்சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்த ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வு பெறுபவருக்கு மட்டுமல்லாமல் அவரது முழு குடும்பத்திற்கும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பலன்களில் வாழ்நாள் முழுவதற்குமான மாதாந்திர ஓய்வூதியம், வாழ்க்கைத் துணைக்கான ஓய்வூதிய ஆதரவு, எதிர்பாராத மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் வழங்கப்படும் நிதி உதவி, மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற நிதித் தேவைகளுக்கான மானியங்கள் ஆகியவை அடங்கும்.
அரசாங்க ஓய்வூதியத்திற்குத் தகுதி இல்லாத தனிநபர்களுக்கு ஓய்வூதியங்களையும் சமூகப் பாதுகாப்புப் பலன்களையும் வழங்குவதற்காக, இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை 1996ஆம் ஆண்டின் சட்டம் எண் 17இன் கீழ் நிறுவப்பட்டு, பின்னர் 1999ஆம் ஆண்டின் சட்டம் எண் 33இன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.