கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம்: மனோ மற்றும் ரிஷாட் விசனம்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவரது கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சிறுபான்மைச் சமூகங்கள் இன்னும் அடக்குமுறைக்குள் இருப்பதையே இந்தத் தாக்குதல் வெளிப்படுத்துகிறது.
சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சிறுபான்மை மக்களின் நிலை எப்படியிருக்கும்?
அவமானப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்
பேரினவாதக் கும்பலின் அட்டகாசங்களுக்கு சிறுபான்மை மக்கள் பலியாவது அல்லது அவமானப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
இவற்றைச் செய்யாமல் சமூக ஐக்கியம் எங்கே வரப்போகிறது? பொலிஸாருக்கு முன்னால் இவ்வாறன அடாவடித்தனங்கள் இடம்பெறுவது சட்டவாட்சியை கேலிக்கூத்தாக்குகின்றது.
சட்டத்தின் ஆட்சியை பேரினவாதக் கும்பல் கையிலெடுக்கும் நிலைமைகள் ஒழிக்கப்படாத வரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பே கிடையாது.
அரசியல் உரிமைகளை உணர்வு ரீதியாக மதிக்கவும் இடமில்லாத இந்த ஆட்சியில், நாம் எந்த நம்பிக்கையில் வாழப்போகிறோம்?" என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மனோ கணேசனின் கோரிக்கை
இதேவேளை எம்பி கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், எம்பி உதிக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக கருதி, விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என சட்டம், ஒழுங்கு துறை அமைச்சர் டிரன் அலசிடம் கூறியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அப்படியே தான் செய்வதாக அமைச்சர் என்னிடம் உறுதியளித்ததாகவும். இதுபற்றி தற்சமயம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கும் தொலைபேசியில் நான் தொடர்புற்று அறிவித்தேன் எனவும் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.




