உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்
2019 ஆம் ஆண்டு நாட்டை பதற்றத்துக்கு இட்டுச்சென்ற உயர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் (Easter attack) தொடர்பில் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்றையதினம் (03.05.2024) சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மார்ச் 25 ஆம் திகதி சுமார் ஐந்து மணிநேரம் அவர் தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இரகசிய வாக்குமூலம்
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மைத்திரிபால உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பில் தமக்கு தெரியும் என்றும் இதனை தாம் நீதிவான் ஒருவரிடம் இரகசிய வாக்குமூலத்தின் மூலம் தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதற்கு முன்னதாக குற்றப்புலனாய்வுத்துறை அவரை அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்தது.
இதன்போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னணியில் இந்தியாவே இருந்ததாகவும், இதனை இந்திய ராஜதந்திரி ஒருவர் தம்மிடம் கூறியதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டதாக தகவல்கள் கசிந்தன.
இருப்பினும் இதனை மைத்திரிபால பகிரங்கமாக மறுக்கவில்லை.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியதை சுட்டிக்காட்டி நீதிவான் ஒருவரின் முன்னிலையில் வாக்குமூலம் வழங்குவதை அவர் தவிர்த்துக்கொண்டார்.
மேலும் இதன் அடுத்த கட்டமாகவே இன்று (03) குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரிடம் இரண்டாவது தடவையாக வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |