படுகொலை செய்யப்பட்ட அருட்பணி செல்வராஜாவின் 35ஆவது ஆண்டு
திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கென குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் (1986 – 1990) குருவாகப் பணியாற்றிய அருட்பணி செல்வராஜா காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (11.07.2025) முப்பத்தியைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
1990களில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட ஈழப்போரின் போது வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஏராளமான தமிழ்க் கிராமங்கள் சூறையாடப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
அருட்பணி செல்வராஜா, 1990ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் திகதி தனது இருசக்கர வாகனத்தில் சொறிக்கல் முனையிலிருந்து கல்முனைக்கு சென்று பசியால் அவதியுறுகின்ற மக்களுக்கு ஏதாவது ஒழுங்கு செய்வதற்காக கல்முனைக்கு சென்றுள்ளார்.
காணாமல் ஆக்கப்படல்..
அதே நாளில் மதிய வேளையில் கல்முனையிலிருந்து மீண்டும் சொறிக்கல் முனைக்கு திரும்பியவர் சேனைக்குடியிருப்பு கிட்டங்கி பகுதிகளைக் கடந்த பிற்பாடு காணாமல் போயுள்ளார்.

அன்றைய அரச உதவி பெறும் படையினரால் கடத்தப்பட்டு மறைக்கப்பட்டார் என கூறப்பட்டு வருகின்றது.
அவரது மறைவுக்கு பிற்பாடு சொறிக்கல்முனை மற்றும் அதனை அண்டியுள்ள தமிழ்க் கிராமங்கள் அனைத்துமே துவம்சம் செய்யப்பட்டு மக்கள் எல்லாருமே தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள சிதறியோடினார்கள்.
சொறிக்கல்முனையிலிருந்து பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார்கள். எஞ்சியவர்கள் அனைவரும் அன்றைய புனித சூசையப்பர் சபைத் துறவிகளால் நடாத்தப்பட்ட பாண்டிருப்பு மாணவர் விடுதி வளாகத்தில் அகதிகளாக குடியமர்த்தப்பட்டனர்.
நினைவு கூரல்
தொடர்ந்து, 1992-1993 காலப்பகுதியில் மீளவும் அவர்களது கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அருட்பணி செல்வராஜா திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்த யுத்த காலத்தில் மறைக்கப்பட்ட இரண்டாவது குருவானவராவர்.
அவரை நினைவுகூரும் வண்ணம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வளாகத்தினுள் ஒரு நினைவுத்தூபி சாந்த குரூஸ் விளையாட்டுக் கழகத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் அவரை சிறப்பான முறையில் சொறிக்கல்முனை மக்கள் நினைவு கூர்கின்றனர்.
எவ்வளவிற்கு என்றால் அவரை ஞாபகப்படுத்தும் வண்ணம் அவரது பெயரிலேயே சொறிக்கல்முனை மண்ணிலிருந்து ஒருவர் குருவாகி மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |