பெரும்பான்மை இன அரசு மீது நம்பிக்கை இல்லை: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்
யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு, தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என மன்னார்(Mannar) மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (30.05.2024) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகள்
மேலும் தெரிவிக்கையில்,
“காணாமல் ஆக்கப்பட்டுள்ள எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.
தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் களப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது.
எமக்கு களப்பு நீதிமன்றத்தில் நம்பிக்கையே இல்லை.எமது ஒரே முடிவு சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.
வேறு எந்த தீர்விலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.
இந்த நாட்டின் ஜனாதிபதியே இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர். தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இன்று பல வருடங்கள் கடந்து விட்டது.
ஆனால் இதுவரை ஒரு வித அனுசரணையும் அவர் செய்யவில்லை.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.” என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |