படையினரின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
யாழ். மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் நிறுத்த வேண்டுமென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda )மற்றும் ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ்(P. S. M. Charles) ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.
காணி சுவீகரிப்பு
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் காணி சுவீகரிப்பு தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் நிறுத்த வேண்டிய அவசியம் குறித்து கருத்து வெளியிட்டார்.
மேலும் “யாழ். மாவட்டத்தில் படையினருக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்க தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்றும் கூட சுழிபுரத்தில் மக்களின் காணிகளை படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவீடு செய்ய இருந்தனர்.
எனினும் காணி உரிமையாளர்கள் பொது மக்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் காணி அளவீடு செய்ய அங்கு வந்திருந்த நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருக்கின்றனர்.
இவ்வாறு பல இடங்களிலும் காணி அளவீடு செய்ய வருகின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. ஆனாலும் பொது மக்களின் காணிகளை படையினருக்கு வழங்க முடியாது.
அளவைத் திணைக்களத்தினருக்கு பணிப்புரை
அத்தோடு படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்வதையும் நிறுத்த வேண்டும் என்பதுடன் தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும்.” என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் போது படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து யாழ் மாவட்டத்தில் படைகளின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை நில அளவைத் திணைக்களம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அத் தீர்மானத்தை ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்மொழிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் வழிமொழிந்தார். இக் கூட்டத்தில் இராணுவம், பொலிஸார், அரச திணைக்கள அதிகாரிகள் அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
