எமது வாழ்நாள் முடிவதற்கு முன் நீதியின் தீர்ப்பை காண விரும்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்து 2000 நாட்களை எட்டியுள்ள இன்றைய தினத்தில் கிளிநொச்சி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமானது.
குறித்த போராட்டத்தில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது,
டிப்போ சந்திவரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டதனை தொடர்ந்து நிறைவு பெற்றது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்திற்கு மகஜர் ஒன்றினையும் அவர்கள் இன்றைய தினம் அனுப்பி வைத்தனர்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் எஸ். கஜேந்திரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசம் இஸ்ராலின் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த காலத்தில் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும், கடத்தப்பட்டும், விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 2000 நாட்களாக நீதி இன்றி போராடி வருகின்றோம்.
ஆரம்பத்தில் இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்த்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவை சந்தித்து நீதி கோரியபோது அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றியிருந்தார்.
இதன் காரணமாகவும் இலங்கையின் நீதித்துறையின் ”சிங்களவர்க்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம்“ என்ற இனத்துவேச அணுகுமுறை காரணமாகவும் (உ.ம் கொலை குற்றசாட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கபட்ட சிங்கள இராணுவத்திற்கு இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி பதவி உயர்வும் வழங்கியுள்ளார். இது போல பல உதாரணகள் உண்டு)
இலங்கை அரசிடம் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து சர்வதேசத்திடம் மட்டுமே நீதி கேட்டு போராடி வருகிறோம்.
எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்திருந்த 138 மேற்பட்ட பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நிலை அறியாமலும், நீதி கிடைக்காமலும் இறந்து விட்டனர்.
நாமும் எமது வயோதிப காலத்தில் நோய்வாய்ப்பட்டு உடல் இயலாத நிலையிலும் சர்வதேசத்தில் நம்பிக்கை வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
எமது உறவுகளில் பெருந்தொகையானோர் 2009 இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், உயிரோடு கையளித்த சரணடைந்த உறவுகளை இறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இரக்கமின்றி அறிவித்தார்.
இதில் 29ற்க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதில் பாதுகாப்புச் செயலராக இருந்து, கட்டளைகளை வழங்கி திட்டமிட்டு இனவழிப்பை மேற்கொண்டதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.
தானே பாதுகாப்பு செயலராக இருந்து மனிதகுலத்திற்கு எதிரான யுத்தம் மூலம் தமிழின அழிப்பை மேற்கொண்டவர் இவரே. இவரின் இவ்வளவு அட்டுழியங்களுக்கும் இவரது சகோதரராகிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்து சகல வழிகளிலும் இவ் இனவழிப்பு யுத்தத்திற்கு முழு அதிகாரமும் கொடுத்து முன்னின்று வழிநடத்தினார்.
இவருக்கு துணையாக இவரது நம்பிக்கைக்குரிய படைத் தளபதிகளும், சிங்கள அதிகாரிகளும் தமிழரை சித்திரவதை செய்து, கொன்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, ஊனமாக்கி, தமிழரின் சொத்துக்களை கொள்ளையடித்து எம் இனத்தை இனவழிப்பு செய்தனர்.
மேற்படி கொடூரங்களைப் புரிந்த சிங்கள அரசுக்கு ஐ.நா வின் தீர்மானம் 30/1 இன் படி பொறுப்புக் கூறலுக்கான கால அவகாசத்தை நீடித்ததன் மூலம் காலம் இழுத்தடிக்கப்பட்டது.
இறுதியில் இலங்கை அரசானது தன்னிச்சையாகவே அனுசரணையிலிருந்து விலகிக் கொண்டது. கடந்க காலங்களிலும் இதையே இலங்கை அரசாங்கம் (சர்வதேச மத்தியத்துடன் நடைபெற இனப்பிரச்சினைகான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் இருந்து இலங்கை அரசு ஒருதலை பட்சமாக விலகியது) தன் யுக்தியாகச் செய்தது.
இலங்கை அரசு பொறுப்புக்கூறும் என்று வீணாக எதிர்பார்த்து காலத்தை மேலும் கடத்தாது தமிழருக்கு இழைத்த அனைத்து குற்றங்களுக்காகவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) நிறுத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அதுவே ஐ.நா உட்பட்ட சர்வதேசமும் இறந்த பெற்றோர்களுக்கும், வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வயோதிப பெற்றோராகிய எமக்கும் செய்யக் கூடிய சர்வதேச நீதியாகும்.
அதுமட்டுமல்ல,1956ம் ஆண்டிலிருந்து இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனம் எமது தமிழ் இனம். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்குவதன் மூலம் “மீள் நிகழாமையை” உறுதிப்படுத்த முடியுமே அன்றி காலங்களை கடத்துவதன் மூலம் தீர்வு காண முடியாது.
வழங்கப்படும் தண்டனை இனி ஒரு இனவழிப்பு நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும். நாம் தமிழர்களாக எமது அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழவே ஆசைப்படுகின்றோம். உண்மையில் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதானால் சம்பந்தப்பட்ட தரப்பின் கோரிக்கை அறியப்பட வேண்டும்.
எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் நமக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக,சுய இலாபமே நோக்காகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் விடயத்திலும், தமிழர் உரிமை (அரசியல் தீர்வு) விடயத்திலும் செயற்படுகிறார்கள்.
எனவே அவர்களின் கருத்து மக்கள் கருத்தாகக் கணக்கிலெடுக்கப்படாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட எமது விருப்பே மேலோங்க வேண்டும். இந்த போராட்டத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்த விரும்புகின்றோம்
1. எமது வாழ்நாள் முடிவதற்கு முன் நீதியின் தீர்ப்பை காண விரும்புகின்றோம். ஆகவே மஹிந்த, கோத்தபாய உட்பட எம் மீதான இனவழிப்பிற்கு காரணமான அனைவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி தண்டனை வழங்கப்படவேண்டும்
2. தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக இலங்கையை விட்டு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, எந்த நாட்டில் ஒளித்திருந்தாலும் சர்வதேச நீதிபொறிமுறையினூடாக கைது செய்து எம்மீது மேற்கொண்ட மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனவழிப்பிற்காக நீதியின் முன் நிறுத்த சர்வதேசம் முன்வரவேண்டும்.
3. இன்றும் கூட எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான சிங்கள இராணுவமே எமது நிலங்களை ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்த சிங்கள இராணுவமே எம்மை தொடர்ச்சியாக அச்சுறுத்துவதுடன், தொடர்ந்தும் எம்மை பீதி நிலையிலேயே வைத்துள்ளது. இந்த இராணுவம் உடனடியாக எமது நிலங்களிருந்து அகற்றப்படவேண்டும்.
4. எம் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடர்ந்து சிங்கள பெளத்த அரசானது எமது நிலங்களையும் ஆலயங்களையும் அடாவடியாக அபகரித்து சிங்கள பெளத்த மயமாக்கலை வெகு வேகமாக செய்து வருகின்றது. இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு காணிகள் உரிய சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
5. சிறையில் தமிழ் அரசியல் கைதிகளாக வாடும் எமது சொந்தங்கள் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.
6. சுயநிர்ணயத்திற்கு உரித்துடைய தமிழ் மக்கள் ஆகிய நாம் எமது அரசியல் தலைவிதியை நாமே தீமானிக்கும் சந்தர்ப்பம் வழக்கப்படவேண்டும். 1948 பெப் 4ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்களிடமும் அவர்களின் வழித்தோன்றல்களிடையேயும் சர்வதேசத்தினால் நடத்தி கண்காணிக்கப்படும் சர்வசன வாக்கெடுப்பு மூலம் நிரந்திர அரசியல் தீர்வு வழங்கப்படப் வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் (Photos) |
வவுனியா
காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரையிலும் இந்த போராட்டம் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் போராட்டம் ஆரம்பித்து 2000ஆம் நாளான இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாம் எமது தொடர் போராட்டத்தின் 2000வது நாளை எட்டியுள்ளோம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
எங்கள் இறுதி இலக்கு இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இறையாண்மை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவது.
உலகின் நாம் தான் ஒரே சாவடியில் 2000 நாட்கள், ஒரு வேளை உணவின்றி தொடருந்து போராடி வருபவர்கள்.
எத்தனையோ தடைகளை கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் இது வரை 121தாய்மார்களை இழந்துள்ளோம்.
மேலும் எங்கள் போராட்டத்தின் முதல் நாளிலிருந்து எங்களுடன் இருந்து 12தாய்மார்கள் மற்றும் நான்கு தந்தைகள், உயிரிழந்தனர். இலங்கை அரசாங்கத்தின் கொழும்பு அழைப்பினால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
அங்கு அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு அவசர கால நிலை, கோவிட்-19 தனிமைப்படுத்தல், குண்டர்கள் மற்றும் எங்கள் போராட்டத்தின் எதிரிகள் இந்தச் சாவடியில் எங்கள் போராட்டத்தில் தடைகளாக இருந்தன.
தினசரி இரவு உணவு மற்றும் பிற உணவுகள் வவுனியாவில் உள்ள வியாபாரிகள் மற்றும் அனுதாபிகளால் எங்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்களின் பெரிய உதவிக்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். தாய்மார்களுக்கான உணவு பொதிகள் மற்றும் அவர்களின் மருத்துவ மற்றும் பிற தேவைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஆதரவளிக்கப்பட்டது.
எங்கள் சுற்றுப்பாதையில் உள்ளவர்களுக்கான சில இறுதி மரண செலவுகளுக்கு உதவவும் முடிந்தது. சில சமயங்களில் நாங்கள் சைக்கிள்கள், தாய்மார்களின் குடிசைக்கு கூரை, குழாய் கிணறு மற்றும் பலவற்றை ஏற்பாடு செய்தோம், புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து உதவி பெற முடிந்தது.
பல என்.ஜி.ஓ, வழக்கறிஞர்கள் மற்றும் சில சுவிஸ் அதிகாரிகள் இந்த சாவடியில் போராட்டத்தை கைவிட்டு OMB இல் சேருமாறு கேட்டுக் கொண்டனர். நாங்கள் செய்ய மறுத்தோம். துரதிஷ்டவசமாக ஏனைய 7 மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் தங்களது தொடர்ச்சியான போராட்டத்தை கைவிட்டு அதனை ஓ.ம்.பியுடன் சேர்ந்தனர்.
ஆனால், கடைசியில் அது தங்களின் தவறு என்று உணர்ந்தனர். குறிப்பாக கிளிநொச்சியில் அம்மாக்கள் போராட்டத்தை கைவிட்டு சுவிஸ் அதிகாரிகளின் சொல்லை கேட்டு ஓ.எம்.பி.யில் இணைந்தனர். சில தாய்மார்கள் சில சிங்கள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினர்.
ஆனால் நாங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்கியது, தமிழர்களுக்கும் அவர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியல் தீர்மானத்திற்கும் எந்தவிதமான முயற்சியும் இந்தியா எடுக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம்.
சில இளம் வழக்கறிஞர்களைப் பார்த்தோம், நல்ல நம்பிக்கை வந்தது. அவர்கள் தேர்தலில் வெற்றி பெற உதவினோம். இப்போது இந்த எம்.பி.க்கள் சிங்களக் கைதிகள் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் குறித்து கவலை கொண்டுள்ளனர்.
எமது தமிழ் அரசியல் கைதிகளைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. வாக்கெடுப்பு நடத்தப் போவதாக மக்களுக்கு உறுதியளித்தனர். ஆனால் இப்போது சமஷ்டி பற்றி பேசுகிறார்கள். TNA பயனற்றது என்று எங்களுக்குத் தெரியும், இப்போது அனைத்து தமிழ் எம்.பிக்களும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதைக் கண்டோம்.
தமிழரின் அரசியல் சுதந்திரம் பற்றி அவர்கள் நினைக்கவே இல்லை. 2000 நாட்களில், நாங்களும் பலவற்றை கற்று சில உறுதியான முடிவுகளைக் எடுத்தோம்.
1. தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் தாயகம் வேண்டும் .
2. இந்த தாயகம் பாதுகாக்கப்பான பாதுகாக்கப்பட்டதாக வேண்டும்.
3. பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல், கொலைகள், இனவழிப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குச் சொந்த இறையாண்மை இருக்க வேண்டும்.
4. ஐ நா வினால் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு மூலம் நமது பாதுகாப்பை அடைவதற்கான முறையான வழி.
5. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.
6. நாம் இறையாண்மையைப் பெற்றால், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகும்.
7.எங்கள் குழந்தைகள் எங்கு என்று எங்களுக்குத் தெரியும். அவர்களில் சிலர் பாலியல் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், அவர்களில் சிலர் பிக்குகளாகவும், அவர்களில் சிலர் சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டனர்.
8. வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தமிழர்களைப் பார்க்க பாவமா இருப்பதாக கூறியிருந்தார் என்பதை நாம் இன்று சொல்ல விரும்புகிறோம்.
ஏனெனில் சிங்களவர்கள் தமிழுக்கு எதிராக வேலை செய்ய தமிழர்களை பணம் கொடுத்து உளவாளிகளாகவும், சம்பளம் வாங்கும் கொலைகாரர்களாகவும், பணம் கொடுத்து போதைப்பொருள் கடத்துபவர்களாகவும், பணம் கொடுத்து பெண்களை தவறான வழியில் செயற்பட வைப்பதுடன், தமிழ் கலாச்சாரங்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்துகிறார்கள். எமக்கு இறையாண்மை கிடைக்கும் வரையிலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை கண்டுபிடிக்கும் வரையிலும் இந்த போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 1 நாள் முன்
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![மீண்டும் நின்ற பழனி திருமணம்.. அண்ணன்கள் செய்த செயல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ](https://cdn.ibcstack.com/article/d4f767e9-da47-4498-b044-7f85e4f85a7a/25-67a8f3feb97e2-sm.webp)