தமிழ் மக்களுக்கு சர்வதேச விசாரணை: அநுர தரப்பு வழங்கியுள்ள உறுதி
சர்வதேச விசாரணைகளை கோரி நிற்கும் மக்களுக்கு அது தேவையில்லை என்பது எதிர்வரும் காலங்களில் தெரிய வரும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
வானொலி ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், " இலங்கை தமிழ் மக்களின் சர்வதேசம் நோக்கிய கோரிக்கை குறித்த விசாரணைகளின் தேவை தொடர்பில் சர்வதேசங்களே தீர்மானிக்க வேண்டும்.
முந்தைய அரசாங்கங்கள்
தமிழ் மக்கள், ஏன் சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கின்றார்கள் என்றால் முந்தைய அரசாங்கங்களின் அசமந்த போக்கு அவர்களுக்கு சிறந்த தீர்வினை வழங்கவில்லை.
எதிர்வரும் காலங்களில் நாங்கள் சிறந்த தீர்வினை வழங்கும் போது, அந்த சர்வதேச விசாரணை தேவையில்லை என மக்கள் நினைப்பார்கள். அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலப்பகுதியில் பல்வேறு போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த ஜெனீவா மாநாட்டிலும் இந்த பிரச்சினை குறித்து பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
சிறந்த தீர்வு
தமிழ் மக்கள், தங்களது நீண்ட கால பிரச்சினை குறித்து உள்நாட்டு விசாரணையை விட சர்வதேச விசாரணையையே எதிர்பார்த்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கமும் சர்வதேசங்களின் தலையீட்டுடனான விசாரணையை எதிர்க்கும் வகையிலான தீர்மானத்தை தான் ஜெனீவா மாநாட்டில் முன்வைத்திருந்தது.
இது முந்தைய அரசாங்கங்களை போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றதா என்ற சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், குறித்த தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வினை வழங்கும் எனவும் இதன் காரணமாக அவர்கள் சர்வதேச விசாரணையின் தேவை குறித்த தெளிவு பெறுவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |