வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் நிகழ்வுகளுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கலந்துரையாடல்
இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன் இணைந்த ஏற்பாடுகள் மற்றும் காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கான நிகழ்வைச் சுமூகமாகவும் பயனுள்ள வகையிலும் முன்னெடுப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர், காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், நிறைவேற்றுச் சபை உறுப்பினர், பிராந்திய ஒருங்கிணைப்பாளர் மற்றும் விசாரணை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர்கள், தூய்மை இலங்கை செயலணியின் மாவட்ட இணைப்பாளர்கள், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.




