என் உயிருக்கு ஆபத்து! காணொளி வெளியிட்ட பின் மாயமான விளையாட்டு வீரர்: வெளியான புதிய தகவல்
பர்மிங்காமைச் சேர்ந்த ரக்பி மற்றும் எக்ஸ் ஃபேக்டர் நட்சத்திரமான லெவி டேவிஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.
தற்போது குறித்த ரக்பி வீரர் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய தகவல்
பிரித்தானிய தொழில்முறை ரக்பி வீரரான லெவி டேவிஸ் மாயமானதன் இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவர் நண்பர் அவருக்கு அனுப்பிய குறுந்தகவல், வாசிக்கப்பட்டிருப்பதாக அவரது நெருங்கிய நண்பர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 29 முதல் ரக்பி வீரரான 24 வயது லெவி டேவிஸ் மாயமாகியுள்ளார்.
அவரது தொலைபேசியானது பார்சிலோனாவின் பிரதான புகையிரத நிலையத்தில் கடைசியாக செயல்பாட்டில் இருந்துள்ளது.
அவர் மாயமாவதற்கு முன்னர் மிரட்டப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தையும் அவரது நண்பர் வெளிப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 15ம் திகதி நெருங்கிய நண்பர் ஒருவர், மாயமான லெவி டேவிஸுக்கு அனுப்பிய குறுந்தகவலே, வாசிக்கப்பட்டுள்ளது.
அவர் மாயமான அன்று, துப்புத்துலக்கும் பொருட்டு பொலிஸார் அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டிருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது டிசம்பர் மாதம் அவரது தொலைபேசியில் குறுந்தகவலை அவர் வாசித்துள்ளதாக கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெவி டேவிஸ் அந்த குறுந்தகவலை தாமாகவே வாசித்திருக்கிறார் அல்லது அவரது தொலைபேசியை இன்னொருவர் ரகசியமாக பயன்படுத்துகிறார் என சந்தேகம் எழுந்துள்ளது.
இருபாலின ஈர்ப்பாளர்
லெவி, விளையாட்டுக் களத்தில் பிரபலமாக இருக்கும் போதே இருபாலின ஈர்ப்பாளர் தாம் என வெளிப்படையாக அறிவித்த முதல் ரக்பி வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் அவர் காணாமல் போவதற்கு சற்று முன்பு சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் சிறிது நேரத்தில் அந்த காணொளி சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதனால் லெவியைத் தவிர வேறு யாரோ அவரது கணக்குகளை அணுகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
அந்த காணொளியில் ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் தன்னையும், தன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.