பெரும் திண்டாட்டத்தில் நாட்டு மக்கள் - களியாட்ட நிகழ்வில் நாமல் உட்பட தென்னிலங்கை அமைச்சர்கள்
நாட்டு மக்கள் உணவுக்காக போராடி வரும் நிலையில் தென்னிலங்கை அமைச்சர்கள் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டு வீட்டு தொகுதியில் அமைச்சர்கள் பலருக்கு மது விருந்து வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, பவித்ரா வன்னிஆராச்சி மற்றும் ஷெஹான் சேமசிங்க உட்பட அமைச்சர்களுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அரசாங்க உள்ளூராட்சி நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுக்காக விசேட உணவு மற்றும் மதுபான விருந்து ஒன்று நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட விருந்திற்கு முன்னதாக கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் நாட்டு மக்களின் நிலை மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முக்கிய உரையை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிகழ்த்தியுள்ளார். அதன் பின்னர் தற்போது நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் எவ்வாறு நிவாரணம் வழங்குவது மற்றும் மே தினத்திற்கு எவ்வாறு தயார்படுத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடினர்.
மக்களுக்கான நிவாரணம் வழங்குவது தொடர்பிலான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை அடுத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கம்பஹா உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மதுபான விருந்தில் இணைந்துள்ளனர்.
விமான நிலையத்தின் உயர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லங்களில் தற்போது உயர்மட்ட அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.