அசுர வேகத்தில் கோடீஷ்வரர்களாக மாறும் அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள்! வெளியாகும் தகவல்
ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்த அநுர அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது அப்படி எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை என தப்பியோடப் பார்க்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இன்று அசுர வேகத்தில் கோடீஷ்வரர்களாக மாறி வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஏமாற்றமடைந்த அரச ஊழியர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு அழகான வாழ்க்கையைத் தரப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது.

விவசாயிகளின் நெல்லுக்கு, நியாயமான உத்தரவாத விலையை வழங்கி அவர்களைக் கௌரவிப்பதாகக் கூறியவர்கள், இன்று அவர்களின் சுயமரியாதையை அடியோடு அழித்துள்ளனர்.
அரச ஊழியர்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறியவர்கள் இன்று அதனை மறுக்கின்றனர்.
ஜனாதிபதி அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள அதேவேளையில், அரசாங்கத்தின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் மட்டுமே அசுர வேகத்தில் கோடீஸ்வரர்களாக உருவெடுத்துள்ளனர்.
நாடாளுமன்றச் சலுகைகளை அனுபவிக்கமாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று நாடாளுமன்ற உணவுக்காக மட்டும் 80 சதவீதத்துக்கும் அதிகமான கூடுதல் செலவை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.