புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர: குவியும் வாழ்த்துக்கள்
சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க
சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுரகுமாரவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் இட்ட முகநூல் பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்காக அநுரகுமார திஸாநாயக்கவை பாராட்டுகிறேன்.
இலங்கை மக்கள் பேசுகின்றனர். மற்றும் ஜனநாயகம் வென்றுள்ளது. நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வருங்கால ஜனாதிபதிக்கு பலமும், விவேகமும், தைரியமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவியை நான் விரைவில் ராஜினாமா செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனுஷ நாணயக்கார
தேசிய நெருக்கடியின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றியமையைப் பெருமையாகக் கருதுவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிர்காலத்தை சிறந்த முறையில் கொண்டு செல்ல வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த முக்கிய தரப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மனுஷ நாணயக்கார தனது எக்ஸ் தள பதிவில்,
தேசிய நெருக்கடியின் போது ரணில் விக்ரமசிங்கவின் குழுவில் இருந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மக்கள் கொடுத்த அதிகாரத்தை அவரின் வழிகாட்டுதலின் கீழ் பயன்படுத்தினேன். எந்த விடயமாக இருந்தாலும், நாங்கள் தொடங்கியதை முடிக்க உறுதிபூண்டுள்ளோம்.ரணிலுக்கு எனது வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தனது பதிவில், அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு சமூக புரட்சியை அநுர உருவாக்கியுள்ளார்.
அவருடைய கொள்கைகளுடன் நாம் முரண்பட்டவர்களாக இருக்கிறோம், அவர் நாட்டுக்காக ஒரு சிறந்த சேவையைச் செய்வார் என்று நம்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்றுவதில் மிகவும் பெறுமதியான பங்கை ஆற்றிய ரணிலுக்கு ஆதரவாக இருந்தது பெருமை என ஜனாதிபதி ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரணிலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அநுரவிற்கு வாழ்த்து தெரிவித்த பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
”என் அரசியல் பயணத்தில் நான் எப்போதும் சவால்களை ஏற்றுக்கொண்டேன், உண்மையான தலைமை என்பது பெரிய நன்மைக்காக ஆபத்துக்களை எடுப்பதைக் குறிக்கிறது என்று நம்புகிறேன்.
நமது நாடு அதன் இருண்ட தருணங்களை எதிர்கொண்டபோது, மீட்சியை நோக்கி நம்மைத் திசைதிருப்ப தேவையான கடினமான முடிவுகளை எடுத்தேன். தோல்வியை எதிர்கொண்டாலும் அந்த தேர்வுகள் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
ரணில் விக்ரமசிங்க வெற்றியடையாமல் இருக்கலாம் ஆனால் அவர் எமது தேசத்தை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்றுவதில் மிகவும் பெறுமதியான பங்கை ஆற்றினார்.அவரை ஆதரித்து அந்தச் செயல்பாட்டில் நான் வகித்த பங்கைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
ஒரு நாடாக நாங்கள் எதிர்கொண்ட மிகவும் சவாலான தருணங்களில் உங்கள் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி.மக்களின் விருப்பத்தை நான் புரிந்து கொண்டதால், பெரும்பான்மை முடிவை முழுமையாக மதித்து, தலை வணங்குகிறேன்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துக்கள். எனது பயணத்தைப் பற்றி நான் சிந்திக்கும்போது, எதிர்காலத்தில் தீவிர அரசியலில் எனது பங்கை மறுபரிசீலனை செய்ய நான் ஒரு முடிவை எடுப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்
அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், நாடாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் முதலாவது வாக்குகள் எண்ணப்பட்டு வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்த வேளையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்த மனோகணேசன், அப்பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
'மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். அதேபோன்று சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக நாம் கடுமையாகப் பணியாற்றிய மத்திய, மேல், சப்ரகமுவ, ஊடக மாகாணங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.
ஜனநாயக செயன்முறை வெளிப்பட்டிருக்கிறது. அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.
சாலிய பீரிஸ்
அநுரகுமார திஸாநாயக்கவினதும், தேசிய மக்கள் சக்தியினதும் இந்த பிரம்மிக்கவைக்கும் வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது.
இது நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த பரிசாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதி என்பதை அவர் உணர்ந்து செயற்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்த வேளையில், அதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தியிருக்கிறார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |