நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது: அதாவுல்லா கோரிக்கை
"சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, இருப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் அரசமைப்பூடாக உறுதிப்படுத்தப்படும் வரை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது" என தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசமைப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது. நாட்டில், ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் ஸ்திரம் அவசியம், இந்த ஸ்திரத்தை உருவாக்கும் வகையில் புதிய அரசமைப்பு அமைய வேண்டும்.
எந்த அரசமைப்பு உருவாக்கப்பட்டாலும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, இருப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் அதில் உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு உறுதி செய்யப்படும் வரை நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்படக் கூடாது, பட்டம், பணம் மற்றும் பதவிகளுக்காகச் சோரம் போகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் வரைக்கும் நாடாளுமன்றத்தைப் பலப்படுத்த முடியாது.

மாகாண சபைகள் முறைமை
இதனால்தான், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அவசியத்தை எமது கட்சி வலியுறுத்துகின்றது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவால் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபைகள் முறைமை எமது நாட்டுக்குத் தேவையில்லை.
சின்னஞ் சிறிய நாட்டை ஒன்பதாகப் பிரித்து நிர்வாகம் நடத்துவதால் செலவுகள் அதிகம். ஏதாவது நாடுகளின் அழுத்தங்களுக்காக இந்த மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டிருந்தால் அந்த நாட்டுக்கு எமது நாட்டின் நிலை குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தல் அவசியம்.
காலிமுகத்திடல் போராட்டம்

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதால் பிரிவினைச் சிந்தனைகள் பலமிழந்துள்ளன. சகல இனங்களும் ஒன்று சேர்ந்து உழைக்கும் புதிய கலாசாரத்தை காலிமுகத்திடலில் காணக்கூடியதாகவுள்ளது.
எனவே, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது போன்று இனவாதமும்
ஒழிக்கப்படல் அவசியம் இதை ஒழிக்கும் வகையிலான புதிய அரசமைப்பு
உருவாக்கப்படுவதுதான் சிறந்தது" என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri