எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்! அமைச்சர் பிமல் தெரிவிப்பு
யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவெடுக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (26.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி கிடைத்துமே அபிவிருத்தியில் தாமதம்
“காங்கேசன்துறை முகாம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நிதி கிடைத்தும் அரசாங்கமே அதனை அபிவிருத்தி செய்ய பின் நிற்கிறது” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஒரு தொகை பணத்தை வழங்கியிருக்கிறது. அந்த நிதி முழுமையான அபிவிருத்திக்கு போதாது எஞ்சிய தொகையை கடன் வாங்க வேண்டியுள்ளது.

அரசாங்கமே முடிவு செய்யும்
அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனையுடன் இருக்கிறோம். ஆனால் எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்.
மத்தள விமான நிலையத்தை கடந்த கால அரசாங்கம் முறையான திட்டமிடல் என்று காட்டியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறான ஒரு நஷ்டமான அபிவிருத்தியை எமது அரசாங்கம் மேற்கொள்ளாது. அபிவிருத்தி தொடர்பில் யார் நீதி வழங்கினாலும் அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என கூறியுள்ளார்.