ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு வலை வீச்சு
முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசிக் தற்பொழுது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாசிக்கிடம், பல கோடி ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்
ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது வெளிவந்த அதிர்ச்சித் தகவல்களின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரண்டு முன்னாள் பெண் அமைச்சர்கள், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட பல பிரபல அரசியல்வாதிகள் அடங்குவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசாரப் பணிகளின் போது ஷிரான் பாசிக் அவ்வப்போது பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த அரசாங்கத்தில் இருந்த சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஷிரான் பாசிக்கு சட்டவிரோதமாக நிலங்களை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த உதவிகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருந்தொகை பணத்தைப் பெற்றுள்ளார்.
சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள்
ஷிரான் பாசிக் நீண்டகாலமாகவே இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாகப் பணத்தைச் செலவிட்டுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், தொடர்பு வைத்துக்கொண்டு பணம் மற்றும் பலதரப்பட்ட சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் குறித்தும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11