அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு எதிராக காணி மோசடி வழக்கு!
அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு எதிராக காணி மோசடி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நெசனல் வர்கஸ் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு மாடிக் கட்டடமொன்றைக் கொண்ட காணியை போலி காணி உறுதி தயாரித்து மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குத்தகை மோசடி
மோசடியான முறையில் குறித்த சொத்து குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் 36 லட்சம் ரூபா பெறுமதியான குத்தகை மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டத்தரப்பினர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எழுத்து மூல சமர்ப்பிப்புக்களை மார்ச் மாதம் 7ம் திகதி நீதிமன்றில் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு நீதிமன்றம் இரண்டு தடவைகள் உத்தரவிட்டுள்ளது.
எனினும், சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறி பொலிஸார் நீதிமன்றை பிழையாக வழிநடத்தியுள்ளனர் என பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிற்சங்கத்தின் தலைவர் என வசந்த சமரசிங்க தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் வேறு தரப்பினரே தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சொத்தின் உரிமை தொடர்பில் கடுவெல நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.