தீவிர நடவடிக்கையில் அரசாங்கம்.. அனோஜன் விவகாரம் குறித்து அமைச்சர் விடுத்த எச்சரிக்கை
புதிய இணைப்பு
சிவராசா அனோஜன் விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் வகையிலோ கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்தார்.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், சிவராசா அனோஜனுடன் நேரடித் தொடர்பில் இருந்து தூதரக ரீதியான உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அதேவேளையில் சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வழக்கு தொடர்பான தற்போதைய மற்றும் எதிர்காலச் செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே ஏற்கும் என்றும், கொழும்பில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும், "இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம் தனது முழுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சிவராசாவின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்படுமாறும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் வகையிலோ கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜன், செப்டெம்பர் 2025 இல் சவூதி அரேபியாவுக்குச் சென்றார்.

ஃபேஸ்புக் (Facebook) பின்னூட்டம் ஒன்றின் காரணமாக அவர் தனது வேலையை இழந்தார்; பின்னர் இஸ்லாம் மற்றும் சவூதி சட்டங்களை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலை 2, 2026 அன்று கைது செய்யப்பட்டார்.
ஜூலை 27 அன்று, சவூதியின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் ரியால் அபராதமும் விதித்தது. இதனை தொடர்ந்து, அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு ஃபேஸ்புக்கில் காணொளி மூலம் மன்னிப்பு கோரியிருந்தார்.
இலங்கைத் தூதரகம் ஜூலை 31 அன்று தீர்ப்பைப் பெற்றுக்கொண்டதுடன், மேல்முறையீட்டு நடைமுறை குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் அளித்தது. அவரது தந்தை மேல்முறையீடு செய்ய ஒப்புக்கொண்டதையடுத்து, ஒகஸ்ட் 24 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், ஷரியா சட்டத்தின் கீழ் சவூதி அரசாங்கம் மேற்கொண்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து, நபிகள் நாயகத்தை அவமதித்த குற்றத்திற்காக செப்டெம்பர் 17 அன்று நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
செப்டெம்பர் 20 அன்று பெறப்பட்டு செப்டெம்பர் 21 அன்று மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துப்பூர்வமான தீர்ப்பு, அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியதோடு, அபராதத் தொகையை நிறுத்தி வைக்கவும், அவரது ஃபேஸ்புக் (Facebook) கணக்கை முடக்கவும் உத்தரவிட்டது.
தற்போது சவூதி மற்றும் உள்ளூர் சட்ட நிபுணர்களுடன் இணைந்து இத்தீர்ப்பை அரசாங்கம் ஆய்வு செய்து வருகின்றது, அதேவேளையில் மன்னிா்ர் கோருவதற்காக இராஜதந்திர, தூதரக மற்றும் மனிதாபிமான வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றது” என குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
சவூதியில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் விஜித ஹேரத் சற்று முன்னர் தகவல்களை வெளியிட்டார்.
தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிக் கொண்டிருக்கும் அவர் இந்த வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து விபரித்தார்.
இதன்போது, அவர், நேற்றைய தினமே அனோஜன் மீதான மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.
YOU MAY LIKE THIS..