அரசாங்கமே வீழ்ச்சி காணும் - அமைச்சர் உதய கம்மன்பில
அரசாங்கத்தின் மீதும், நாட்டின் மீதும் அச்சுறுத்தல் உள்ளதை கருத்தில் கொண்டு நாம் குரைக்கின்றோம், ஆனால் ஆபத்தை அறியாது எம்மை துரத்தியடிக்க நடவடிக்கை எடுத்தால் இறுதியில் அரசாங்கமே வீழ்ச்சி காணும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கையை, 2028ஆம் ஆண்டு வரை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை இலங்கையின் எரிவாயு தொடர்பான ஆராய்ச்சிக்கு தடையாக அமையும்.
நியு போட்ஸ் எனர்ஜி நிறுவனத்துக்கு எரிவாயு விநியோகத்துக்காக, 2023ஆம் ஆண்டிலிருந்து 5 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2028ஆம் ஆண்டு வரையே அவர்கள் எரிவாயுவை விநியாகிக்கவுள்ளனர்.
இந்த வருடத்தின் இறுதியில் விலைமனுவை கோரி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், 3 வருடத்தில் எமது நாட்டில் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்கலாம்.
ஆனால் 2028ஆம் ஆண்டு வரை அமெரிக்க நிறுவனத்தக்கு எரிவாயு விநியோகத்தை வழங்குவதானது, இலங்கையின் எரிவாயு தொடர்பான அகழ்வாராய்ச்சிகளுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த விடயங்கள் குறித்து அறிந்தவர்கள் என்ற ரீதியில் இது தொடர்பில் அமைச்சரவைக்கு இரண்டு கண்காணிப்பு அறிக்கைகைளை வழங்கியுள்ளோம்.
இந்த அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எவ்வளவு நாட்கள் கலந்துரையாடினார்கள் என்பது குறித்து தனக்கு தெரியாது. ஒரே நாள் அல்லது இரண்டு நாட்களில் சர்வதேச ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.
அவர்கள் நிபந்தனைகளை முன்வைக்கின்றனர். நாம் இணங்குகின்றோம். ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர்.
எனவே எமது நாட்டுக்கு பாதகமாக அமையும் ஒப்பந்தத்தில் நான் கைச்சாத்திடவில்லை. வீட்டில் உள்ள நாய்களை போன்று தான், நாம் அரசாங்கத்தில் செயற்பட்டுக் கொண்டுள்ளோம்.
இரவு நேரங்களில் வீட்டில் உள்ள நாய் குறைப்பதால், அந்த வீட்டார் உறங்க முடியாமல் அந்த நாயை ஒரு வதையாக பார்த்தார்கள். இதனால் வீட்டு உரிமையாளர் அந்த நாயை வீட்டில் இருந்து விரட்டி விட்டார்கள்.
அந்த நாய் இரவில் குறைத்தது ஏன்? அந்த வீட்டிற்கு ஆபத்து வரும் போதுதான் அது குறைத்தது. நாய் குறைக்கும் திசையை பார்த்து ஆபத்தை கண்டுபிடிப்பதை விடுத்து அந்த நாயை விரட்டினால் இறுதியில் அந்த வீட்டாருக்கே ஆபத்து ஏற்படும்.
அதேபோல் தான் அரசாங்கத்தின் மீதும் நாட்டின் மீதும் அச்சுறுத்தல் உள்ளதை கருத்தில் கொண்டு நாம் குறைக்கின்றோம். ஆனால் ஆபத்தை அறியாது எம்மை துரத்தியடிக்க நடவடிக்கை எடுத்தால் இறுதியில் அரசாங்கமே வீழ்ச்சி காணும் என குறிப்பிட்டுள்ளார்.