தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்ரமணியன், ஏவ வேலு ஆகியோர் வைத்தியசாலைக்கு விரைந்து பார்வையிட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சராக அதிமுக ஆட்சியிலிருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளை வழங்க சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு
இது தொடர்பாக அவர் மீது 3 வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் பதிவு செய்துள்ளதுடன்,அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமுலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை 8 மணி முதல், சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை காரில் அழைத்து சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் விளக்கம்
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ,
"அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
இது கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |