கொழும்பில் பிரமாண்டமாக இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பிறந்த நாள் நிகழ்வு! மக்கள் கடும் எதிர்ப்பு
நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு கொழும்பில் உள்ள முன்னணி விருந்தகம் ஒன்றில் பிரமாண்டமான பிறந்தநாள் விழா கடந்த புதன்கிழமை (10.05.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அலரிமாளிகைக்கு வெளியிலும் காலி முகத்திடலிலும் முகாமிட்டிருந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் நிஷாந்தவும் ஒருவராவார்.
இந்த நிலையில் பல சமூக ஊடக பயனர்கள் இராஜாங்க அமைச்சரின் பிறந்த நாள் விழா தொடர்பில் தமது கடுந்தொனி கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
எனினும் அதற்கு பதிலளித்துள்ள சனத் நிஷாந்த, தனது பிறந்தநாள் உண்மையில் மே 3 அன்று என்றும், இந்த மாதத்திற்கான நாடாளுமன்றம் மே 9 அன்று கூடியதால், அன்றைய தினம் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விருந்தொன்றை நடத்த வேண்டும் என்று முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தடுத்ததாக குறிப்பிட்டுள்ள சனத் நிஷாந்த, காலி முகத்திடல் தாக்குதலைத் தொடர்ந்து கொல்லப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் ஓராண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |