கடதாசி ஆலைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் (Video)
கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த ஆலைக்கு நேற்று (10.10.2022) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், ஆலையினை பார்வையிட்டதுடன் ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ஆலையில் கடதாசி உற்பத்தி தொடர்பாகவும், ஆலையின் குறைப்பாடுகள் தொடர்பாகவும் நிருவாகிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், ஆலை உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் பார்வையிட்ட பின்னர் ஊழியர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
ஊழியர்களின் பங்களிப்பு
இதன்போது கருத்து தெரிவித்த அவர், வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தியை அதிகரிக்க ஊழியர்களின் பங்களிப்பு முக்கியம் எனவும் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதுடன் இலாப கொடுப்பனவும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடதாசி ஆலையில் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் கூறப்பட்ட நிலையில் போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆலையில் பழுதடைந்த நிலையில் உள்ள நோயாளர் காவுகை வண்டியை திருத்தி ஊழியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு பயன்படுத்த வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நாளாந்த சம்பளம்
அத்துடன் உற்பத்தியை அதிகரிக்கும் பட்சத்தில் இருபத்தைந்து நாட்களுக்கு மேல் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவும், நாளாந்தம் வழங்கி வரும் ஆயிரம் ரூபா சம்பளத்துடன் மேலதிமாக 350.00 ரூபா சேர்த்து நாளாந்த சம்பளமாக 1350.00 ரூபா வழங்கவுள்ளதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இதற்கு ஊழியர்கள், இராஜாங்க அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடதாசி ஆலையின் தவிசாளர் விமல் ரூபசிங்க, கடதாசி ஆலையின் சிரேஷ்ட இணைப்பதிகாரி ஓய்வுபெற்ற கேணல் எஸ்.பி.சுதர்மசிறி, உற்பத்தி முகாமையாளர் வி.சிவாகர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.