குவைத் தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துரையாடல் (PHOTOS)
குவைத் தூதுவர் ஹலாப் எம்.எம் புதைரை சந்தித்து சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் சுற்றாடல் துறையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், வாயுக்களின் வெளியேற்றத்தால் சூழல் மாசடைவதை தடுக்க முடியாவிடினும் குறைக்கும் உபாயங்களை அடையாளம் காண்பதன் அவசியம் குறித்தும் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.
கலந்துரையாடலில் உள்ளடங்கிய விடயம்
இயற்கை சக்திகளால், சுற்றாடல் அடையும் அனுகூலங்கள் மற்றும் இதனால் ஏற்படும் கழிவுகளை மனித நுகர்வுக்கு உகந்ததாக்குவது குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், புதுப்பிக்கத்தக்க சக்திகளைக் கொண்டு அடையச்சாத்தியமான வழிகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக, குவைத் உதவுவது மற்றும் இத்துறையிலுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மற்றும் இலங்கையில் முதலிடுவதன் மூலம் உள்ளூர் தொழில்வாய்ப்பு, துறைசார் தேர்ச்சிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்குமாறும் அமைச்சர் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டார்.
மேலும்,இரு நாடுகளுக்கிடையிலும் நீண்டகால உறவுகள் நிலவ, புரிந்துணர்வுடன் செயற்படுவதற்காகவும், இயற்கை அனர்த்தங்கள், அவசர தேவைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது குவைத் நேசக் கரம் நீட்டி உதவுதற்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.