அமைச்சர் நாமலுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் தர்க்கம்!(காணொளி)
தனிப்பட்டவர்களின் தரவுகளை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.
குறிப்பாக இந்த சட்டமூலத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ள நியமனங்கள், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அந்த நியமனங்களில் நம்பிக்கையில்லை என்று எதிர்கட்சியினர் குறிப்பிட்டனர்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ள நிலையில் இந்த சட்டமூலத்தை ஒத்திவைத்து ஒரு மாதக்காலத்தின் பின்னர் இதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளமுடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமது உரையின்போது கருத்துரைத்த ஹர்ச ராஜகருண, ஒரு கட்டத்தில் சபைக்கு தலைமை தாங்கிய குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் ராமநாதனுடன் வாதத்தில் ஈடுபட்டார்.
தமது உரையின்போது சட்டமூலத்தை சமர்ப்பித்த அமைச்சர் நாமல் ராஜபக்ச, அடிக்கடி இடையூறுகளை மேற்கொள்வதை குழுக்களின் பிரதித்தலைவர் அனுமதிப்பது தொடர்பிலேயே அவர் அங்கஜன் ராமநாதனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
“நாமல்” என்ற அடிப்படையில் அவரின் இடையூறுக்கு வாய்ப்பை வழங்கவேண்டாம் என்று ராஜகருண கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த அங்கஜன் ராமநாதன், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமளிக்க உரிமையிருப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை சட்டமூலம் தொடர்பில் உரையாற்றிய எதிர்கட்சியின் உறுப்பினர்கள் பலரும், இந்த சட்டமூலம் ஊடகவியலாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்காக ஊடகவியல் அமைப்புக்களின் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் நாமல் ராஜபக்ச, தனிப்பட்டவர்களின் தரவுகளை பாதுகாக்கும் சட்டமூலத்துக்கும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்துக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று குறிப்பிட்டார்.