இன்று சபையில் முன்வைக்கப்பட்ட பொய்! சர்ச்சையை கிளப்பும் அஜித் பி. பெரேரா வெளியிட்ட ஆவணங்கள்!
நாட்டில் மின்தடை ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நேற்றைய தினம் மின்வெட்டு ஏற்பட்டதற்கான உத்தியோகபூர்வ ஆதாரங்கள் என குறிப்பிட்டு தனது முகப்புத்தக பக்கத்தில் சில தகவல்களை முன்வைத்து அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
குறித்த பதிவில், "அமைச்சருக்குத் தெரியவில்லை, எங்களுக்குத் தெரியும்! நேற்று மின்வெட்டு எதுவும் இடம்பெறவில்லை என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று ஏற்பட்ட மின்தடை
ஆனால் அமைச்சருக்குத் தெரியாவிட்டாலும், நேற்று மின்வெட்டு ஏற்பட்டதை நாங்கள் அறிவோம்” என அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், "இந்த அமைச்சர் இந்தப் பதவியை வகிக்க தகுதியற்றவர். இதோ அதற்கான உத்தியோகபூர்வ ஆவணம்" என சுட்டிக்காட்டி அந்த பதிவிவை இட்டுள்ளார்.
குறித்த பதிவின் படி, போதுமான மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால், நேற்று மாலை 6:31 மணி முதல் இரவு 10:59 மணி வரை 33kV மின் விநியோகக் கட்டமைப்புகளில் (Feeders) மின் சுமை குறைப்பு (Manual Load Shedding) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகள் மூலம் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இது குறித்து கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, தற்போதைய எரிசக்தி சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் எவ்விதமான திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளையும் (Scheduled Power Cuts) நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிவித்தார்.
ஆங்காங்கே ஏற்படும் மின் தடைகள் மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் திடீர் முறிவுகள் (System Breakdowns) காரணமாக ஏற்படுகின்றனவே தவிர, அவை திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் அல்ல என அவர் மேலும் விளக்கமளித்திருந்தார்.