யாழில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடிய அமைச்சர்
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் ரி. பி. சரத் ஆகியோா் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம்(25.04.2025) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக இந்த ஆண்டு 1258 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபரின் கோரிக்கை
மேலும், வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதுமானதாக இல்லை எனவும் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரிக்க ஆவன செய்யுமாறும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அத்துடன், இதுவரை விடுவிக்கப்பட்ட காணி மற்றும் விடுவிக்க வேண்டிய காணியின் விபரங்கள், தெல்லிப்பளை பிரதேச உள்ளக வீதி அபிவிருத்தி, குடிநீர் வசதிகள், மின்சார இணைப்பு வசதிகள் தொடர்பாகவும் விளக்கமளித்து அது தொடர்பான கோரிக்கைகளும் அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கருத்து தெரிவித்த அநுர கருணாதிலக, தேவைப்பாடுகளை சாதகமாக பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




