வட மாகாணத்திலுள்ள மிகப்பெரும் பிரச்சினைக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - அமைச்சரின் அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட கலந்துரையாடல்
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (12.09.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் அளவுக்கு ஏற்ப பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறை காணப்படுவது எமக்குத் தெரியும்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை
இதனை நிவர்த்தி செய்வதற்காக ஆட்சேர்ப்புகளுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதுடன், அரசாங்கமும் தேவையான ஆட்சேர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதற்காக வட மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதியை குறைக்க முடியாது. கடந்த காலங்களில் 'வடக்கின் வசந்தம்' போன்ற திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகளவான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களிலும் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
