முல்லைத்தீவு வெலிஓயாவில் மில்கோ குளிர்பதன சேமிப்பு நிலையம் திறந்து வைப்பு
இலங்கையில் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மில்கோ நிறுவனம் புதிய குளிர்பதன சேமிப்பு நிலையமொன்றை வடிவமைத்துள்ளது.
இதன் திறப்பு விழா, இன்று(31.01.2026) முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமாராக 6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த குளிர்பதன சேமிப்பு நிலையம், மில்கோ நிறுவனத்தின் 97வது குளிர்பதன நிலையமாக அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஊக்குவிப்பு நடவடிக்கை
இந்நிலையம் பண்ணையாளர்களிடமிருந்து பெறப்படும் 5,000 லீற்றர் பாலை ஒரே நேரத்தில் சேமிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துடன் இணையாக, மில்கோ நிறுவனத்திற்கு திரவ பால் வழங்கிய 16 விவசாயிகளுக்கு 1.2 மில்லியன் ரூபா மதிப்பிலான ஊக்கத்தொகை காசோலைகளும், பால் சேகரிப்பு கொள்கலன்களும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வழங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், நிகழ்வில் மில்கோ நிறுவனத்தின் துணைத் தலைவர் புஷ்பகுமார கமகே, வடக்கு மாகாண மேலாளர் சம்பத் ஜெயசேகர, மில்கோ நிறுவன அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அப்பகுதியை சேர்ந்த பால் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த குளிர்பதன சேமிப்பு நிலையத்தின் மூலம் வடக்கு மாகாணத்தில் திரவ பால் உற்பத்தி மேலும் ஊக்குவிக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கான வருமானமும் உறுதியாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







