மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு மற்றுமொரு சவால்! மேய்ச்சல்தரைப் பகுதியை சூழ்ந்துள்ள இராணுவத்தினர்
மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருவதனால் அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் இராணுவத்தினரைக் கண்டதும் விரண்டு ஓட்டம் எடுப்பதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த விடயமானது மயிலத்தமடு, மாதவனைப் பகுதியில் அமைந்துள்ள மேய்ச்சல் தரைப் பகுதியை வர்த்தமானிப் பிரகடனம் செய்து சட்டபூர்வமான மேச்சல்தரையாக மாற்றித்தருமாறு கோரி மிக நீண்ட காலமாக போராடி வரும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு இராணுவத்தினைக் கண்டு பயம் கொண்டு கால்நடைகள் காடுகளுக்குள் ஓடி ஒழிகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேண்டுகோள்
மேலும் இவ்வாறு ஓடுகின்ற கால்நடைகள் மேச்சல் தரைப் பகுதியில் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றவர்களின் பயிர்களுக்குள்ளும் செல்கின்றன. இதனால் மீண்டும் ஓர் இன வெறுப்புக்கள் உண்டு பண்ணக் கூடிய சூழல் ஏற்படுவதாக அந்தப் பகுதி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரைக் கண்டு ஓட்டம் எடுக்கும் கால்நடைகளை, தற்போதைய மழையுனான காலநிலைக்கு மத்தியில் தமது கட்டுப்படுத்துவதென்பது மிகுந்த சிரமமாகவுள்ளதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
எனவே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர், உள்ளிட்ட சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த விடயத்தில் கருத்திற் கொண்டு இராணுவத்தினரின் பயிற்சிகளை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் பகுதி பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.





