வலிகாமம் வடக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு
வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தால் பயன்படுத்தப்படாத காணிகள் கூட தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு காணி விடுவிப்பு தொடர்பில் வாக்குறுதிகளை வழங்குகின்ற போதிலும், அந்த வாக்குறுதிகளுக்கு அமைய செயற்படுவதில்லை.
குறிப்பாக வலிகாமம் வடக்கில் மட்டும் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
இராணுவ ஆக்கிரமிப்பு
இவற்றில் பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டித்துறை தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டிய நிலைமையே உள்ளது. இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும்.
பல காணிகள் இராணுவத்தினர் பயன்படுத்தாமல் பற்றைகள் மண்டிக் காணப்படுகின்றன. அதேபோன்று பலாலி கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 600 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் தேவையற்ற வகையில் உயர்பாதுகாப்பு நிலங்களாக உள்ளன.

அதே இடங்களில் வயாவிளான் சந்தியை அண்மித்த மானம்பிராய் ஆலயத்தோடு இணைந்த 3 ஆலயங்களுக்கு உரிய காணிகளை ஏற்கனவே விடுவிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்ட போதிலும், இன்னமும் விடுவிப்புச் சாத்தியமாகவில்லை.
அதேபோன்று குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில், இராணுவத்தின் விவசாய நடவடிக்கைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
காணி விடுவிப்பு
சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் காணிவிடுவிப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். 1990 ஜூன் மாதம் இடம்பெயர்ந்து சென்ற அவர்களால், இன்றளவும் தமது நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்துடன், பலாலி வீதி இரவு 7 மணிவரையே அனுமதிக்கப்படுகின்றது. அதை 24 மணிநேரமும் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு விடுவிக்க வேண்டும்.
அதேபோன்று வயாவிளான் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையில் தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் செல்வதற்கான பாதை 35 ஆண்டுகளுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.