யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க உட்கட்டுமானங்கள் தொடர்பில் புலம்பெயர்ந்தோரின் பார்வை
யாழ்ப்பாணத்தின் சிறிய வீதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழிநுட்பம் தொடர்பில் அறிவு சார்ந்தோரினால் இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க உட்கட்டுமானம் பற்றிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளையவர்கள் கொண்டுள்ள தேடல் மகிழ்ச்சியளிப்பதாக சமூக விடய ஆய்வுகளில் ஈடுபடுவோர் குறிப்பிடுகின்றனர்.
சாதாரணமான ஒன்றைக் கூட பயன்படுத்தும் ஆற்றலினால் பயன்படுத்துவோர் சாதனைகளை நிகழ்த்திச் செல்கின்றனர்.
இந்நவகையில், யாழ்ப்பாணம் வரணியின் இடைக்குறிச்சி குறுக்கு வீதிகளில் நீர் வழிந்தோடுவதற்கென வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு புத்திசாலித்தனமானதாக இருப்பதாக பலரும் பாராட்டி பெருமிதம் கொள்கின்றனர்.
சுற்றுலா நோக்கில் பயணப்பட்டிருந்த புலம்பெயர் தமிழர்களின் இளம் சந்ததியினர் சிலர் இந்த அணுகுமுறை தொடர்பில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வியந்திருந்தனர்.
வீதியில் உள்ள தாழிறக்க பாலம்
குறுக்கு வீதிகளில் வீதியை குறுக்கறுத்து நீர் பாய்ந்து செல்வதற்காக பாலங்கள் அமைக்கப்படும். சிறியளவிலான வெள்ளம் வடிந்து ஓடுவதற்காக தாழிறக்க பாலம் என்ற கட்டமைப்பு வீதிகளில் பயன்படுத்தப்படுவது வழமை.
வரணியின் இடைக்குறிச்சியில் உள்ள பல குறுக்கு வீதிகளில் இந்த தாழிறக்க பாலத்தினை அவதானிக்கலாம்.
தாரிடப்பட்ட வீதிகளில் நிலத்திற்கும் வீதிக்கும் இடையே பெரியளவில் உயர வேறுபாடில்லை.குழாய்ப்பாலங்களை அமைப்பதிலும் தாழிறக்கப் பாலங்களை அமைப்பது பயன்பாடுமிக்கதாக இருக்கும் என பொறியியலாளர் ஒருவர் இது சார்ந்து அவர்களுக்கு விளக்கியிருந்துள்ளார்.
இளையவர்களாக இருந்த போதும் யாழ்ப்பாணத்தின் கட்டமைப்புக்கள் பால் அவர்கள் கொண்டுள்ள ஆர்வம் தொடர்பில் அந்த பொறியியலாளர் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இது போல் யாழ்ப்பாணத்தின் பல இடங்கள் உள்ளன.அவையெல்லாம் நுணுக்கமான விஞ்ஞான ஆற்றல்களை கொண்டவையாக இருக்கின்றன.ஈழத்தமிழர்களின் இளையவர்களிடையே இவைபற்றிய அறிவும் ஆற்றலும் மேலோங்கிச் செல்ல வேண்டும். இந்த ஆற்றல்களை அவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இளையவர்களின் பார்வையில்
புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பல இளம் ஈழத்தமிழ் தலைமுறையினரிடையே மேற்கொண்ட கருத்துத் தேடலில் அவர்களின் யாழ்ப்பாணம் பற்றிய கருத்துக்களை அறிய முடிந்தது.
யாழ்ப்பாணத்தின் உட்கட்டுமானங்கள் தங்களை வியப்பில் ஆழ்த்துவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.நீண்டபாரம்பரிய மக்கள் வாழ்வு இருந்ததிற்கான சான்றாக நிபுணத்துவமிக்க உட்கட்டுமானத் தொகுதிகளை அவதானிக்க முடிகின்றது.
தாம் வாழும் சூழலில் தமக்கேற்பட்ட அனுபவத்தினடிப்படையில் கட்டுமானங்களை மக்கள் மேற்கொள்ளும் போது சூழலின் சவால்களை இலகுவாக எதிர்கொள்ள முடியும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
புதிய அபிவிருத்திகளின் போது பழமை மாறாத நவீனத்துவத்தை உருவாக்கும் போது யாழ்ப்பாணத்தின் தமிழ்ப் பாரம்பரியத்தினை அதன் உட்கட்டுமானமே எடுத்தியம்புவதாக இருக்கும் என பொறியியல் துறையில் கற்றலில் ஈடுபட்டுவரும் புலம் பெயர் ஈழத்தமிழ் இளையவர் ஒருவர் தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
வீதிகளில் உள்ள குப்பைகள்
வீதிகளின் ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகள் தொடர்பிலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.வீதிகளை சுத்தமாகவும் அழகாகவும் பேணும் இயல்பு அரிதாக இருப்பது வருத்தமளிக்கும் செயற்பாடாகும்.
மக்கள் நடமாட்டம் குறைந்த யாழ்ப்பாணத்தின் பல வீதிகளில் இயற்கை அமைப்பு இயல்பாகவே உள்ள போதும் அவற்றை அவற்றின் இயற்கைத் தன்மையோடு தொடர்ந்திருக்க தடையாக அவ்விடங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகள் இருப்பதாக அவர்கள் தங்கள் பயணங்களின் போது அவதானித்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
வன்னியில் இல்லை
யாழ்ப்பாணத்தில் உள்ளது போன்ற ஆச்சரியமிக்க உட்கட்டுமான நுணுக்கங்களை வன்னியில் அவதானிக்க முடியவில்லை.
வீதிகளின் அமைப்பு மற்றும் கடடடக்கலை, ஆன்மீக நாட்டம், கற்றலில் உள்ள தேடல் போன்ற பலவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
குளங்களற்ற யாழ்ப்பாணத்தின் விவசாய விளைவிப்பின் பல்வகையளவு குளங்களுள்ள வன்னியின் அளவோடு ஒப்பிட்டால் மிக அதிகளவில் இருக்கும் என தான் நினைப்பதாக புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் ஒருவர் குறிப்பிட்டார்.
வரணி இடைக்குறிச்சியில் உள்ள தாரையமைப்பு போல் உள்ள வன்னியின் பல இடங்களில் குழாய் மதகுகளை வைத்து வீதிகளை அமைத்துள்ளனர்.
அவ்வாறு அமைத்த மதகுகள் ஊடாக நீரோட்டம் நடைபெறுவதில்லை.வீதியை மேவி வெள்ளம் பாய்ந்து செல்லும்.இதனால் வீதி விரைவாக பழுதடைந்து போய்விடும்.
தாழிறக்க பாலங்களை அமைத்து வீதிகளை மேவிச் செல்லும் வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தினை தவிர்த்திருக்க முடியும்.ஆனபோதும் அவ்வாறு செய்யவில்லை என அவர்கள் தங்கள் ஒப்பீட்டினையும் பகிர்ந்திருந்தனர்.
வினைத்திறன் மிக்க கட்டுமானங்கள்
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளம் சந்ததியினரிடையே யாழ்ப்பாணத்தின் பல விடயங்கள் வரவேற்பை பெற்றிருந்தன. யாழ்.பொது நூலகம், யாழ்ப்பாணத்தின் விவசாய அணுகுமுறை, கடற்றொழில் முயற்சி, விலங்கு வேளாண்மை என அவர்கள் பலவற்றை குறிப்பிட்டுச் சொல்லியிருந்தனர்.
யாழ்ப்பாணத்தின் ஆலயங்களின் கட்டட நுட்பங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பகிர்ந்திருந்தனர்.
தொழில் மற்றும் தொழில் சார் சந்தைப்படுத்தலை அடிப்படையாக கொண்ட கலாச்சார விழுமியங்கள் மீதான அவர்களது ஒட்டுமொத்த பார்வையும் வரவேற்கக் கூடியதாக இருப்பதாக இவர்களுடனான உரையாடல்கள் தொடர்பில் சமூக விடய ஆய்வாளருடன் கலந்துரையாடிய போது அவர் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு தேடும்படியான நோக்கில் அவர்கள் வினவி இருந்தனர்.
யாழ். கோட்டை மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் மற்றும் யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளம் குழுவினர் வினவியது தொடர்பில் சமூக விடய ஆய்வாளர் வரதன் குறிப்பிடும் போது உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் இளையவர்களிடையே தாயகம் பற்றிய தேடல் மேலோங்கி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
எனினும், அவர்களின் தேடலின் போது அவர்களுக்கு தவறான தகவல்கள சென்றடைவதை தடுப்பதில் கவனமெடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |