அமெரிக்க தேர்தல் தாக்கம் மெக்சிகோவிலும்..! பொருளாதாரத்தை மீட்டெடுக்க களமிறங்கிய அரசு
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை விரைந்து எட்டுவதற்கு மெக்சிகோ தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வரிப் போர் தீவிரமடைந்துள்ளது.
ஒத்துழைப்புடன் செயற்படும் மெக்சிகோ
இந்நிலையில், கனடா சந்தித்த நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் வொஷிங்டனுடன் நேருக்கு நேர் மோதலைத் தவிர்த்து, ஒத்துழைப்புடன் செயற்படும் உத்தியை மெக்சிகோ கையாண்டு வருகின்றது.
இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினியத்திற்கான வரிகளில் இருந்து விலக்கு பெற மெக்சிகோ எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, மெக்சிகோவில் சீனாவின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வாகன உற்பத்தியில் அமெரிக்க உதிரிப்பாகங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு மெக்சிகோ இணக்கம் தெரிவிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்
தனது ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்காவுக்கே நம்பியுள்ள மெக்சிகோ, தனது பலவீனமான பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்லவும் இந்த ஒப்பந்தத்தை அவசியமாகக் கருதுகின்றது.
மேலும், இடைக்காலத் தேர்தலுக்கு முன்னர் இவ்வாறானதொரு ஒப்பந்தத்தை எட்டுவது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் அரசியல் ரீதியாகப் பெரும் நன்மையளிக்கும் எனக் கருதப்படுகின்றது.