மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை
மெக்சிகோவின் மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல் கும்பலான 'சினாலோவா கார்டெல்' அமைப்பின் தலைவரான இஸ்மவேல் 'எல் மாயோ' ஜம்பாடாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற விசாரணை
சுமார் 40 ஆண்டுகளாகப் போதைப்பொருள் பேரரசை நடத்தி வந்த எல் மாயோ, தனது கடத்தல் நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, பல மில்லியன் கிலோகிராம் கொக்கையின் போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தியதை எல் மாயோ ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த இறுதியான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான எல் மாயோவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஆயுள் தண்டனை, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க நீதித்துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.