எல் நினோ நிலைமையால் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்! வெளியான புதிய தகவல்
'எல் நினோ' நிலைமை எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும் போது மிகவும் வலுவான நிலையை அடையும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையைப் பாதித்துள்ள 'எல் நினோ' காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்.
வலுவடையும் எல் நினோ
அதனுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்படும் இந்த 'எல் நினோ' நிலைமை, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும் போது மிகவும் வலுவான நிலையை அடைவதற்குக் கிட்டத்தட்ட 60%க்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சர்வதேச நோவா மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலைமையின் தாக்கம் காரணமாக, இதன் விளைவாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி குறையக்கூடும். குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
தற்போதைய அறிகுறிகளின்படி செப்டெம்பர் மாதத்திலும் மழை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், வரும் காலத்தில் பசிபிக் பெருங்கடலில் Typhoon போன்ற சூறாவளிகள் உருவானால் இந்நிலைமை மாறி, தென்மேற்கு பருவக்காற்று சற்றே சுறுசுறுப்படைவதன் மூலம் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.