18 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க இணங்கிய மெட்டா! வரலாற்று சிறப்பு மிக்க வழக்கு
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் சிறார்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, மெட்டா நிறுவனம் சுமார் 1,800 கோடி அமெரிக்க டாலர் வரை பெருந்தொகை இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களால் சிறார்களின் மனநலம் பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு, மெட்டா நிறுவனத்தின் இந்த இணக்கத்தின் மூலம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த இமாலய இழப்பீட்டுத் தொகையில் 17.6 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் 48 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பிரித்து வழங்கப்படவுள்ளது.

இதில் கலிபோர்னியா மாநிலம் அதிகபட்சமாக 2.2 பில்லியன் டொலரையும், நியூயார்க் மற்றும் டெக்சாஸ் மாநிலங்கள் தலா 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையையும் இழப்பீடாகப் பெறுகின்றன.
இது தவிர, 'கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா' தரவு கசிவு விவகாரம் தொடர்பான வழக்கை முடிவுக்குக் கொண்டுவர 459 மில்லியன் டொலரை மெட்டா தனியாகச் செலுத்துகிறது.
மெட்டா நிறுவனம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள இந்த மொத்த இழப்பீட்டுத் தொகையானது, அந்நிறுவனத்தின் 3 முதல் 4 மாதகால முழு லாபத்திற்கு இணையான பெருந்தொகையாகும். பெருந்தொகை இழப்பீட்டைத் தவிர்த்து, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்களது தளங்களின் செயல்பாடுகளில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மெட்டா சம்மதித்துள்ளது.
இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சிறார்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும், பெற்றோர் அனுமதியின்றி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களால் சிறார்களுக்கு ஏற்படும் பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரித் தொடரப்பட்ட இந்தத் தொடர் வழக்குகளில், தன் மீதான தவறை நீதிமன்றத்தில் மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும், பல அமெரிக்க மாநிலங்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் சூழலில், வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர இந்த பிரம்மாண்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க மெட்டா முன்வந்துள்ளது.