கொல்கத்தாவில் இருந்து அகற்றப்படும் மெஸ்ஸியின் சிலை
இந்தியாவிற்கு கடந்த ஆண்டு வருகை தந்த கால்பந்து உலகின் மாபெரும் நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியைக் கௌரவிக்கும் வகையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நிறுவப்பட்ட அவரது பிரம்மாண்டமான தங்க நிறச் சிலை, பலத்த காற்றில் ஆடுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அகற்றப்பட உள்ளதாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜென்டினா மற்றும் இன்டர் மியாமி அணியின் 38 வயதான நட்சத்திர வீரர் மெஸ்ஸி, உலகக் கோப்பையை ஏந்தி நிற்பது போன்ற இந்த 21 மீட்டர் (70 அடி) உயரமுள்ள பிரம்மாண்ட சிலை, கடந்த டிசம்பரில் அவரது 'கோட்' இந்தியப் பயணத்தின் போது அவராலேயே ஒன்லைன் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான வீதியின் ஓரத்தில் இந்தச் சிலை அமைந்துள்ளது.
மெஸ்ஸியின் சிலை பாதுகாப்பற்றது
தற்போது இந்தச் சிலை காற்றில் அசைவதைப் பார்த்த மேற்கு வங்க அரசின் பொறியாளர்கள், இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்று எச்சரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை அன்று தொழிலாளர்கள் அவசரமாகச் சிலையின் தோள் பகுதியில் கயிறுகளைக் கட்டி அதனைக் தற்காலிகமாகப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் சரத்வத் முகர்ஜி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் சிலை பாதுகாப்பற்றதாக இருப்பதாக பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது காற்றில் ஆடுவதை நாங்கள் கவனித்தோம்.
உலகக் கோப்பைத் தொடர்
இந்தச் சிலையை அகற்றுவது சொல்வது போல எளிதானதாக இல்லை என்றாலும், மிக விரைவில் அதனைப் பாதுகாப்பாக அகற்றத் திட்டமிட்டு வருகிறோம்," என்று கூறியுள்ளார்.

எனினும், இந்தச் சிலை வேறு இடத்தில் மீண்டும் நிறுவப்படுமா என்பது குறித்து அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஆர்ஜென்டினா அணி ஜூன் 16 அன்று அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்துடன் தனது உலகக் கோப்பைத் தொடரைத் தொடங்கவுள்ள நிலையில், மெஸ்ஸியின் சிலை கொல்கத்தாவில் அகற்றப்படும் செய்தி அவரது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.