ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டிணைவு சாத்தியப்படுமா
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன கூட்டிணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போதைய நாட்களில் நடைபெற்று வருகின்றது.
எனினும் குறித்த பேச்சுவார்த்தைக்கும் அதன் ஊடான கூட்டிணைவுக்கும் வெளியில் சம்மதம் தெரிவித்திருந்தபோதும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அதனை குழப்பியடிக்கும் செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் ஒருபோதும் கூட்டிணையப்போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்த சஜித் பிரேமதாச, தேவையென்றால் ஐக்கிய தேசியக்கட்சியினர் வந்து தமது கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்தார்.
கூட்டிணைவு
பின்னர் கட்சியின் மத்திய குழு மற்றும் மூத்தஅரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்மத்தும பண்டார தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமித்திருந்தார்.
பின்னர் திடீரென்று இரண்டு கட்சிகளும் இணைவதாயின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவி ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என்று புதிய நிபந்தனை விதித்தார்.
கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் வேறுதரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக அந்தக் கோரிக்கையை அடக்கி வாசித்த அவர், அண்மைய நாட்களில் இரண்டு கட்சிகளும் இணைந்தால் தனக்கே தொடர்ந்தும் தலைமைப்பதவி வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்.
மறுபுறத்தில் இதுவரை காலமும் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரளையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
ரஞ்சித் மத்துமபண்டார தலைமையிலான குழுவுக்குப் பதிலாக தற்போதைக்கு கபீர் ஹாசிம் தலைமையில் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மற்றும் எஸ்.எம்.எம்.மரிக்கார் எம்.பி. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எனினும் குறித்த குழுவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பதிலாக குறைந்தபட்சம் முன்னைய நடைமுறைபோன்று இரண்டு கட்சிகளின் செயலாளர்கள் (ரஞ்சித்மத்தும பண்டார-தலதா அதுகோரளை) தலைமையில் இணைப்புத்தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதுவரை எதுவித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
