டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தை மீண்டும் வணிகத்துக்குள் கொண்டு வர முயற்சி
மதுபானத் துறையை நிர்வகிக்கும் தகுதிவாய்ந்த அதிகாரசபையான மதுவரி திணைக்களத்துக்கு 5.8 பில்லியன் ரூபாய்களை வரி ஏய்ப்பு செய்த டபிள்யூ.எம். மெண்டிஸ் அண்ட் கோ நிறுவனத்தை மீண்டும் வணிகத்தில் ஈடுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்தை, நிதி அமைச்சு நிராகரித்துள்ளது.
இதனையடுத்து, சட்டமா அதிபரின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று மதுவரி திணைக்கள தரப்புகள் தெரிவித்துள்ளன.
அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை
கடந்த ஆண்டு முழுவதும், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மதுபான நிறுவனமான டபிள்யூ.எம். மெண்டிஸ் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமங்களை, 2024 டிசம்பர் 4 அன்று இரத்து செய்ய மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
இதன்போது, குறித்த நிறுவனம், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 5.8 பில்லியன் ரூபாய்கள் வரை குவிந்திருந்தது.
இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மதுவரித் தலைவர் யு.எல். உதய குமார பெரேரா, மதுபான நிறுவனத்திற்கு, நிலுவைத் தொகையான 5.8 பில்லியனில் பாதியை முதலில் செலுத்த ஒப்புக்கொண்டு, அதன் செயல்பாடுகளை மீண்டும் கொண்டு வர முன்மொழிந்ததார்.
மீதமுள்ள நிலுவைத் தொகை
இதற்காக,ஒரு மாதம் வரை, அதன் உரிமங்களை மீண்டும் செயல்படுத்தவும், முதல் மாத இறுதிக்குள் மாதாந்த வரிகளையும் மீதமுள்ள நிலுவைத் தொகையின் மற்றொரு தவணையையும் செலுத்துவதன் மூலம் வணிகத்தைத் தொடரவும் இந்த திட்டம் பரிந்துரைத்தது.
இருப்பினும், நிதி அமைச்சகத்தின் நிதிக் கொள்கைப் பிரிவு இந்த முன்மொழிவுக்கு சாதகமாக பதிலளிக்கவில்லை.
இதனையடுத்தே, சட்ட மா அதிபரின் உதவியைப் பெறுவதற்கு, மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
