புத்தளம் பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
புத்தளம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மூன்று கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (14.1.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குற்றப் புலனாய்வுப் பிரிவு
கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு ஐஸ் போதைப்பொருளை கற்பிட்டி கல்முனை பேருந்தில் கொண்டு சென்று பாலாவி பகுதியில் இறங்கி இன்னுமொரு பேருந்து ஒன்றில் கொண்டு செல்ல இருந்ததாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கீழ் இயங்கும் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் மற்றும் பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் இணைந்து நேற்று இரவு 7.45 மணியளவில் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியில் வைத்து குறித்த பேருந்தை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
இதன்போது சூட்சமமான முறையில் மறைத்து வைத்திருந்த 3 பார்சல் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3 கிலோ கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டதாகவும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சுமார் 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென இதன்போது தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயதுடைய கொழும்பு வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர் என பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |