தோப்பூர் சிறுவர் பூங்காவினை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்
தோப்பூர் சிறுவர் பூங்கா மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால் தோப்பூர் சிறுவர் பூங்காவினை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வலியுறுத்தியுள்ளார்.
மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சேதமடைந்த வீதி
அவர் மேலும் கூறுகையில், நல்லூர் சந்தியிலிருந்து உள்ளைக்குளம் GPS சந்தி வரையான 5 1/2 கிலோமீட்டர் தூரத்தையுடைய வீதி சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வீதியை சுற்றுலாப் பயணிகள் உட்பட பலர் தமது போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். கடந்த அரசு காலத்தில் "ஒரு இலட்சம் வீதிகள்" திட்டத்தில் இவ்வீதி உள்வாங்கப்பட்டும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
எனவே, இவ்வீதியை முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். தோப்பூர் இக்பால் நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள களப்பில் நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் தமது மீன்பிடித் தொழிலினை மேற்கொண்டு வருகின்றனர்.
தோணி பாதுகாப்பாக நிறுத்த வசதி
இவர்கள் தமது தோணிகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு ஒழுங்கான வசதிகள் இன்மையினால் மாரி காலங்களில் பல நூறு மீட்டர் தூரத்திற்கு தோணிகளை இழுத்துச் சென்று நிறுத்தி வைத்துவிட்டு பின்னர் கடலுக்குச் செல்லும் பொழுது மீண்டும் அங்கிருந்து கடலுக்கு இழுத்து வரவேண்டியுள்ளது. இதன் காரணமாக கடற்தொழிலாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே, இக்களப்பில் தோணிகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்குரிய இறங்குதுறையுடன் கூடிய படக்குத் தரிப்பிடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். கட்டைபறிச்சான் பாலம், கிண்ணியா கண்டல்காடு - மூதூர் மூனாம் கட்டைமலை வீதியில் அமைந்துள்ள வெள்ளை நாவல் பாலம் என்பன சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது, மேலும் ஹபீப் நகர் பாலமும் போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் உள்ளது.
பாலம்
இப்பாலத்தை கடற்படையினர் செய்வதற்கு முன்வந்த போதிலும் சிலர் தாம் செய்வதாக கூறி அதனை நிறுத்தினர், இப்பொழுது செய்வதாகச் சொன்னவர்களும் செய்யவில்லை, கடற்படையினரையும் செய்யவிடவில்லை. எனவே, மேற்படி மூன்று பாலங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
விவசாய செயற்பாடுகளுக்காக வழங்கப்படும் நீர் விநியோகம் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர், சம்மாந்துறை விவசாய சங்கத்திற்கு உற்பட்ட விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகம் கிடைப்பதில்லை என குறிப்பிடுகின்றனர். எனவே, விவசாய நிலங்களுக்கு ஒழுங்காக நீர் விநியோகத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
சுனாமியினால் மரணித்தவர்களுக்கான நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்காக மாவட்ட செயலாளரினால் அடிக்கல் நடப்பட்ட போதிலும் இதுவரை அந்நினைவுத்தூபி அமைக்கப்படவில்லை. எனவே, சுனாமி நினைவுத்தூபியினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.